கோலாலம்பூர்: எரிசக்தி, விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்துதல் தளமாக இவ்வாண்டு திகழ மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
அத்துடன், பகுதிமின்கடத்தித் துறைக்கும் இஸ்லாமிய நிதித்துறைக்கும் தலைமை தாங்கும் நாடாக இருக்க மலேசியா விழைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) தெரிவித்தார்.
பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திரு அன்வார், மலேசியாவின் பொருளியல் கடந்த ஆண்டு பேரளவில் மீண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
இதற்கு உத்திபூர்வ முதலீடுகள் குவிந்ததே முக்கிய காரணம் என்றார் அவர்.
புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டதை பிரதமர் அன்வார் சுட்டினார்.
தென்கிழக்காசியாவில் முதலீட்டாளர்களுக்கான புகலிடமாக மலேசியா இருந்து வருகிறது.
மேம்பட்டு வரும் பொருளியல் வளர்ச்சி, ரிங்கிட்டின் மதிப்பு சீராக இருப்பது ஆகியவை முதலீட்டாளர்களை மலேசியாவுக்கு ஈர்க்கின்றன.
தென்கிழக்காசியாவில் உள்ள சில நாடுகளில் அரசியல் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாடுகளின் பொருளியல் வளர்ச்சி நிச்சயமற்றதாக இருப்பதாலும் முதலீட்டாளர்களின் கவனம் மலேசியாவை நோக்கித் திரும்பி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“புவியியல் அடிப்படையில் மலேசியா அமைந்துள்ள இடத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டில் எரிபொருள், மின்சாரம், திறன், விநியோகச் சங்கிலி ஆகியவற்றுக்கான தளமாகத் திகழ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்று பிரதமர் அன்வார் கூறினார்.
பணவீக்கம் குறைந்திருப்பதாகவும் மலேசியப் பங்குச் சந்தை துடிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்தன.
இதன்மூலம் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் அந்நாட்டின் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகளவில் வளர்ச்சி கண்டது.
மலேசிய நாணயமான ரிங்கிட்டின் மதிப்பும் கூடியது.
தனது பகுதிமின்கடத்தித் துறைக்குக் குறைந்தது 500 பில்லியன் ரிங்கிட் (S$107 பில்லியன்) முதலீட்டுத் தொகை குவிய வேண்டும் என்று மலேசியா இலக்கு கொண்டிருப்பதாகப் பிரதமர் அன்வார் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.