கோலாலம்பூர்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்டது.
வானில் பறந்துகொண்டிருந்த வேளையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து MH79 என்னும் அந்த விமானம், வியட்னாமின் டான் சோன் நாட் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.
கோலாலம்பூர் வந்து சேரவேண்டிய அந்த விமானம், ஞாயிறு காலை 10.40 மணியளவில் வியட்னாம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
அதில் இருந்த 147 பயணிகளும் ஏழு விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் மாற்று விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.. வேறு சிலர் விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பயணிகளின் சிரமத்திற்காக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி இடையூறுகளில் சிக்கியதன் காரணமாக, மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்க இருப்பதாக மலேசிய விமானப் பயணக் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்து இருந்தது.