கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் புதிய ‘ஏர்பஸ் ஏ330நியோ’ (Airbus A330neo) சேவையைத் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே நிறுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் காரணங்களால் ‘ஏர்பஸ் ஏ330நியோ’ சேவையை நிறுத்தியிருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்தது. சில நாள்களுக்கு முன்புதான் அந்த விமானம் முதன்முறையாகப் பயணம் மேற்கொண்டது.
இச்செய்தி, மலேசிய ஏர்லைன்சுக்கு ஏற்பட்டுள்ள மேலும் ஒரு செயல்பாடு தொடர்பான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
48 மணிநேரத்துக்கு ‘ஏர்பஸ் ஏ330நியோ’ சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தி ஸ்டார் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் தொடர்பில் மலேசிய ஏர்லைன்சுக்கு ஆதரவளிக்க ஏர்பஸ், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.
‘ஏர்பஸ் ஏ330நியோ’ விமானம், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிநவீன இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
மலேசிய ஏர்லைன்சின் ‘ஏர்பஸ் ஏ330நியோ’ விமானம் முதன்முறையாக இம்மாதம் 19ஆம் தேதியன்று பயணம் மேற்கொண்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குப் பயணம் மேற்கொண்ட அவ்விமானம் பல தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
புதிய விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இது, தனக்கு அவமானம் என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி இஷாம் இஸ்மாயில் வருத்தம் தெரிவித்திருந்தார்.