மலேசியா ஏர்லைன்ஸ் MH370: விமானம் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை இல்லை

மலேசியா ஏர்லைன்ஸ் MH370: விமானம் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை இல்லை

2 mins read
விவரங்கள் கிடைத்தால் மறைந்தோரின் குடும்பங்களுக்கு அதுபற்றி தெரிவிக்க மலேசிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது: விசாரணை வாரியம்
f7ec9ed9-384b-44e8-8f59-d00abba30c1c
மலேசியா ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானத்தின் மாதிரி வடிவம். புகைப்படம் கடநத 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிக் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அதிகாலையில் பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் எவ்விதத் தொடர்பும் இன்றி காணாமல் போனது பலருக்கும் நினைவிருக்கும்.

அதனைத் தேடும் அண்மைய முயற்சியில் அதுபற்றி எவ்வித விவரமும் கிடைக்கவில்லை என்று மலேசிய விமான விபத்துக்கான விசாரணை வாரியம் தெரிவித்துள்ளது.

விமானத்தைத் தேடும் பணிக்காக நியமிக்கப்பட்ட ஓஷன் இன்ஃபினிட்டி என்ற நிறுவனம் தென் இந்திய ஆழ்கடலில் உள்ள 7,571 சதுர கிலோ மீட்டர் அளவு பகுதியில் இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்ததில் விமானம் குறித்த எவ்வித விவரமும் கிடைக்கவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட தேடுதல் வேட்டை, கடந்த ஜனவரி 23ஆம் தேதி நிறைவடைந்தது.

“இந்த அறிக்கை வெளியிடப்படும் வரை, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் இடம் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தென்னிந்தியப் பெருங்கடலில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஏறத்தாழ 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்துகொண்டது.

அதன்படி, “தேடிக் கிடைக்கவில்லை எனில் கட்டணம் இல்லை” என்ற இருதரப்பு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய ஒருமணி நேரத்துக்குப் பிறகு தென்சீனக் கடல் பகுதியில் அதன் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு அந்த விமானம் காணாமல் போனது. அதில் பயணம் செய்த 227 பயணிகளும் 12 சிப்பந்திகளும் இறந்துவிட்டதாகவே கருதப்படுகின்றனர்.

விவரங்கள் கிடைத்தால் மறைந்தோரின் குடும்பங்களுக்கு அதுபற்றி தெரிவிக்க மலேசிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக விசாரணை வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்