ஆஸ்திரேலியாவுக்குக் கூடுதல் எரிசக்தி வழங்க மலேசியா உறுதி

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் 3 நாள் மலேசியப் பயணம்

ஆஸ்திரேலியாவுக்குக் கூடுதல் எரிசக்தி வழங்க மலேசியா உறுதி

2 mins read
c7e69567-3dba-44c2-bf44-5a04a654a7b6
மலேசிps வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்குப் புத்ராஜெயாவிலுள்ள பெர்தானா புத்ரா கட்டடத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் நடந்து செல்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

புத்ராஜெயா: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஆஸ்திரேலியாவிற்குத் தேவையான கூடுதல் எரிபொருளை வழங்க மலேசியா முன்னுரிமை அளிக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு அல்பனிசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்வார், “உள்நாட்டுத் தேவையே முதன்மையானது என்றாலும், நட்பு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிற்கு எரிபொருள் வழங்க பெட்ரோனாஸ் உறுதி அளித்துள்ளது,” என்றார்.

மலேசியாவிற்குத் தேவையான ‘பாஸ்பேட்டு’ (phosphates) தாதுப்பொருளை ஆஸ்திரேலியா வழங்கும் என்றும் பதிலுக்கு மலேசியா ‘யூரியா’வை வழங்கும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியா வந்துள்ள திரு அல்பனிஸ் புரூணை, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்கெனவே 100 மில்லியன் லிட்டர் டீசல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியா, மலேசியாவிற்கு வழங்கிவரும் திரவமாக்கப்பட்ட எரிவாயு, உணவுப் பொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

2025ஆம் ஆண்டு தரவுகளின்படி, மலேசியாவின் திரவமாக்கப்பட்ட எரிவாயு (LNG) தேவையில் 96 விழுக்காடு ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் மொத்த எரிபொருள் இறக்குமதியில் 17 விழுக்காட்டை மலேசியாவிடம் வாங்குகிறது.

சந்திப்பின்போது, ஹலால் இறைச்சி வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.

இது, ஆஸ்திரேலியாவின் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, மலேசியாவின் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹலால் சான்றிதழ், தரக்கட்டுப்பாட்டில் மலேசியா உலகத்தரம் வாய்ந்த நாடாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இருநாட்டு வணிக உறவை மேலும் வலுப்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

2021ல் தொடங்கப்பட்ட ‘விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ (CSP) திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சுநிலைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, மலேசியாவின் 12வது மிகப்பெரிய வணிகப் பங்காளியாகத் திகழ்கிறது. 2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 78 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வணிக உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், வட்டாரப் பொருளியல் நிலைத்தன்மையை மேம்படுத்த உறுதிபூண்டன.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ரகிமும் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகின்றனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ரகிமும் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்