கோலாலம்பூர்: உலகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே ஹலால் முத்திரையைப் பயன்படுத்துவது குறித்து மலேசியாவும் இந்தோனீசியாவும் ஆலோசித்து வருகின்றன.
மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாஹித் ஹமிடி இதனைத் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் உலக ஹலால் மன்றக் கூட்டத்தில் இம்முயற்சியை முன்வைக்க விரும்புவதாக அவர் கூறினார்.
“கடந்த சில நாள்களாக நமது இந்தோனீசிய அமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். ரஷ்யாவில் நடைபெற்ற கஸான் கலந்துரையாடலிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.
“நமக்கு வலுவான மன உறுதியிருந்தால் உலகம் முழுவதும் இதனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும். ஹலால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமானது,” என்று புதன்கிழமை ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற பொருளியல் கருத்தரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் தெரிவித்தார்.
மலேசிய ஹலால் தொழில்துறை மேம்பாட்டு மன்றத்தின் தலைவருமான அகமட் ஹமிடி, ஒரே ஹலால் முத்திரையே முயற்சியின் நோக்கம் என்றார்.
“அதாவது, உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ஹலால் முத்திரைகளுக்கான தேவையிருக்காது, ஆனால் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) வழங்கும் ஹலால் சான்றிதழ்களின் அளவுகோலை தரமாகப் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இதில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், ஜாகிம் மிக உயர்தரமான ஹலால் சான்றிதழ்களை வழங்குகிறது. இதனை, உலகம் முழுவதும் 88 ஹலால் அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன,” என்று அஹமட் ஸாஹிட் ஹமிடி மேலும் தெரிவித்தார்.

