அணுசக்தி பயன்பாட்டை நெருங்கும் மலேசியா

2 mins read
4b7d7438-451d-4190-aa77-fd9e89d765d9
அணுசக்தி தயார்நிலைக்கு ஆதரவு வழங்க ஆறு தொழில்நுட்பப் பணிக்குழுக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்று மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் புதன்கிழமையன்று (ஜூலை 30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: அணுசக்திப் பயன்பாடு குறித்து மலேசியா கிட்டத்தட்ட முடிவெடுத்துவிட்டதாக அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் தெரிவித்துள்ளார்.

அணுசக்திப் பயன்பாடு சாத்தியமானதா என்பதை கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டுக்குத் தேவையான எரிசக்தியை சீரான, தூய்மையான, நம்பகமான முறையில் அணுசக்தியால் வழங்க முடியும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக அமைச்சர் சாங் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அணுசக்தி தயார்நிலைக்கு ஆதரவு வழங்க ஆறு தொழில்நுட்பப் பணிக்குழுக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் சாங் புதன்கிழமையன்று (ஜூலை 30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த பணிக்குழுக்களில் மூன்று அமைச்சின்கீழ் செயல்படும் என்று அவர் கூறினார்.

அவை தொழில்நுட்ப, துறை சார்ந்த மேம்பாடு, அணுசக்தி ஆற்றல் மேம்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் சாங் தெரிவித்தார்.

எஞ்சிய மூன்று பணிக்குழுக்கள் எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்று அமைச்சின் மேற்பார்வையின்கீழ் செயல்படும் என்று அவர் கூறினார்.

மலேசிய அணுசக்தி ஆணையத்தின்கீழ் தற்போது 323 அணுசக்தி ஆய்வாளர்கள் உள்ளனர்.

அந்நாட்டின் அணுசக்தித் துறையின்கீழ் 36 அறிவியல் அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களில் 61 பேர் அணுசக்தி அறிவியல், பொருளியல் பட்டதாரிகள் என்று திரு சாங் கூறினார்.

“அணுசக்தித் தொழில்நுட்பத்தை பாதுகாப்புடனும் பொறுப்புடனும் மேம்படுத்த உள்ளூர் நிபுணத்துவத்தை உருவாக்க மலேசியா கொண்டுள்ள கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது,” என்று திரு சாங் தெரிவித்தார்.

மலேசியா அதன் அணுசக்தி சட்டத்தைத் திருத்த செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் திருத்தப்பட்ட சட்டத்தை இந்த நாடாளுமன்ற அமர்வின்போது தாக்கல் செய்ய இலக்கு கொண்டுள்ளோம் என்றார் அமைச்சர் சாங்.

குறிப்புச் சொற்கள்