செரி நிறுவனத்தின் ‘ஓமோடா 5’ வகை கார்களின் விற்பனைக்கு மலேசியா தடை

செரி நிறுவனத்தின் ‘ஓமோடா 5’ வகை கார்களின் விற்பனைக்கு மலேசியா தடை

படம்: செரி

12 Oct 2026 - 5:00 pm

2 mins read

கோலாலம்பூர்: சீன கார் தயாரிப்பு நிறுவனமான செரியின் ‘ஓமோடா 5’ வகை காரின் புதிய பதிவுகளை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

அந்த காரின் தொழில்நுட்பச் சான்றிதழைத் தற்காலிகமாக ரத்து செய்ததுடன், அதன் உற்பத்தி, தொழில்நுட்பக் கட்டமைப்பு, விநியோக நிறுவனங்கள் ஆகியவை குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அத்துறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜோகூர் பாருவில் உள்ள இயான் மால் டெப்ராவ் சிட்டி கடைத்தொகுதிக்கு அருகில் செரி நிறுவன ‘ஓமோடா 5’ வகையைச் சேர்ந்த கார் ஒன்று ஓடிக்கொண்டிருந்தபோது, அதன் பின்புற அமைப்பு இரு சக்கரங்களுடன் முழுமையாகக் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

அக்டோபர் 6ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தத் தற்காலிகத் தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ‘ஓமோடா 5’ காரின் ‘சி’, ‘ஹெச்’ வகைகளை செரி ஆட்டோ மலேசியா நிறுவனம் உடனடியாக மீட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கெனவே, அக்கார்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வாகனப் பரிசோதனைகளும் தேவைப்படும் பட்சத்தில் பாகங்களில் மாற்றமும் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகன ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஹால் செருடின், உற்பத்தியாளர்கள் குறைபாட்டைக் கண்டறிந்ததும் தாமாகவே முன்வந்து மீட்டுக்கொள்ளும் நடைமுறையையும் பாதுகாப்பு, தகவல் தொடர்பு முறைகளையும் மேம்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஈராண்டுகளில் செரி நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை இதுவாகும்.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் இதேபோன்ற சக்கர அமைப்பு, அச்சுக் கோளாறு ஆகியவை காரணமாக 600 கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றிருந்தது.

சிங்கப்பூரில் ‘ஓமோடா 5’ கார்கள் விற்பனை செய்யப்படாததால், இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் சிங்கப்பூர் பாதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇடைநீக்கம்கார்விற்பனை