மலேசியாவின் வடமேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகத் தீவான பினாங்கிற்குத் தெற்கே, அகழ்பொறி இயந்திரங்கள் நீலப் பச்சை நிறக் கடற்பகுதியை ஒரு புதிய செயற்கைத் தீவாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
‘சிலிக்கான் தீவு’ என்று அழைக்கப்படும் அந்த 930 ஹெக்டர் பரப்பளவிலான பகுதி முழுமையடையும்போது, அது உலகளாவிய பகுதிமின்கடத்தித் துறையில் மலேசியாவின் பங்கை வலுப்படுத்தும் என்றும் அந்நாட்டின் பொருளியலில் பல நூறு பில்லியன் டாலரைச் சேர்ப்பதோடு, 2050க்குள் கிட்டத்தட்ட 220,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்காவின் அளவைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு பெரிதான அந்தத் தீவில், அலுவலகக் கட்டடங்கள், ஹோட்டல்கள், நீர்முகப்புக் குடியிருப்புகள் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பினாங்கின் சொந்த வெற்றியால் உருவான ஒரு பிரச்சனைக்கு அந்தத் திட்டம் ஒரு தீர்வாக அமைவதாகக் கூறப்படுகிறது.
தென்கிழக்காசியாவின் முன்னணி மின்னணுவியல், பகுதிமின்கடத்தி நடுவங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான பினாங்கு நிலப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
பினாங்கில் மேலும் வளர்ச்சி காண்பதற்கான இடம் அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக புளூம்பெர்க் செய்திக்கு அளித்த நேர்காணலில் அந்த மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார்.
“பினாங்கின் தற்போதைய தொழில்துறை பலங்களை மேலும் விரிவுபடுத்துவதோடு, உலகளாவிய தொழில்நுட்பச் சுழற்சியின் அடுத்த கட்டத்திற்கு மாநிலத்தை ஆயத்தப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாக சிலிக்கான் தீவு விளங்குகிறது,” என்றார் அவர்.
உலகின் பகுதிமின்கடத்தி ஏற்றுமதியில் பினாங்கு ஏற்கெனவே கிட்டத்தட்ட 5 விழுக்காட்டைக் கொண்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.
தற்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பின் அதிவேக விரிவாக்கம், இதற்கான தேவையின் மற்றோர் ஆதாரமாக விளங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
