விடுமுறையை முன்னிட்டு மலேசியாவில் பேருந்துச் சேவைகளுக்கான தேவை மந்தம்

2 mins read
b76dfcd7-f877-4a2c-8099-3e1c9f5d4433
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஒரு பகுதி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜார்ஜ்டவுன்: சீனப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையிலும் மலேசியாவில் எக்ஸ்பிரஸ் பேருந்து நுழைவுச்சீட்டுகளுக்கான தேவை இதுவரை எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாக இருந்து வந்துள்ளது.

உள்ளூர் பேருந்துச் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்களிடம் இன்னமும் விற்பதற்குப் பல நுழைவுச்சீட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்ல விரும்பக்கூடும் என்பதால் பேருந்து நுழைவுச்சீட்டுகளுக்கான தேவை அதிகம் இல்லை என்றார் எக்ஸ்பிரஸ் பேருந்துச் சேவைகளை வழங்கும் லிம் இயோவ் ஹெங். வழியே காணப்படும் காட்சிகளை ரசித்தவாறு மக்கள் தொலைதூரத்துக்கு வாகனம் ஓட்ட விரும்பக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைக்கு (நுழைவுச்சீட்டு) விற்பனை வழக்கநிலையில்தான் இருக்கிறது. விண்ணப்பங்கள் அவ்வளவாக அதிகரிக்கவில்லை,” என்று அவர் சொன்னார்.

எனினும், நுழைவுச்சீட்டு விற்பனை சூடுபிடிக்கும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக திரு லிம் தெரிவித்தார். பொதுவாக விடுமுறை காலம் நெருங்கும்போது தனது நிறுவனம் அதிக அளவில் விண்ணப்பங்களைக் கையாளும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் எல்லா மாநிலங்களுக்கிடையேயும் பயணச் சேவை வழங்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளை திரு லைலி இஸ்மாயிலின் நிறுவனம் நடத்துகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்நிறுவனம் அத்தகைய 90 எக்ஸ்பிரஸ் பேருந்துகளை நடத்துகிறது.

கடைசி நேரத்தில் ஏமாற்றமடைவதைத் தவிர்க்க முன்னரே நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்குமாறு அவர் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அவ்வாறு செய்தால் பேருந்து நிறுவனங்களாலும் நன்கு திட்டமிட்டு பேருந்துகள், ஓட்டுநர்களைச் சரிவரப் பணியில் ஈடுபடுத்த முடியும்,” என்று திரு லைலி குறிப்பிட்டார்.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் மாணவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பல்கலைக்கழகங்கள் தன்னிடம் விண்ணப்பிக்கும் என்று மற்றோர் எக்ஸ்பிரஸ் பேருந்துச் சேவை நிறுவனத்தின் உரிமையாளரான திரு அகம்மது ருஸ்லான் அப்துல் லாட்டிஃப் கூறினார்.

விமானப் பயணங்களைப் பொறுத்தவரை பயணிகளிடையே இருக்கும் வரவேற்பு வெவ்வேறு பாதைகளுக்கு மாறுபடும் என்றார் ‘பாத்திக் ஏர்’ தலைமை நிர்வாகி சந்திரன் ராம முதி.

சீனப் புத்தாண்டு விடுமுறை காலம் நெருங்கும் வேளையில் எல்லா விமானங்களிலும் இன்னும் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம் என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, கோத்தா கினபாலு, டவாவ் ஆகியவற்றுக்குச் செல்லும் விமானங்களில் நுழைவுச்சீட்டுகள் பாதி விற்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்