புத்ராஜெயா: குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தங்கள் உடைகளில் பொருத்திக்கொள்ளும் வகையிலான 600 படக்கருவிகளை மலேசிய உள்துறை அமைச்சு வாங்கவிருக்கிறது என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குடிநுழைவு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்தன.
அதன் தொடர்பில், அத்துறையின் தலைமை இயக்குநர், பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, குடிநுழைவு அதிகாரிகளிடத்தில் லஞ்ச ஊழலைக் குறைத்து, அதுசார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமர் விரும்புவதாகத் திரு சைஃபுதின் குறிப்பிட்டார்.
உடையில் பொருத்தக்கூடிய அந்தப் படக்கருவிகள் இம்மாதம் 28ஆம் தேதி விநியோகிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
அத்துடன், நெரிசலைக் குறைக்கும் வகையில் மலேசியாவின் பெரும்பாலான விமான நிலையங்களில் குடிநுழைவு முகப்புகள் அகற்றப்பட்டு, தானியக்க அனுமதி வழிகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, 157 மாவட்டக் காவல்துறைத் தலைமையகங்களிலும் 640 காவல் நிலையங்களிலும் உடையில் பொருத்தி அணியத்தக்க 7,000க்கும் மேற்பட்ட படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, இவ்வாண்டில் சாலைப் போக்குவரத்துத் துறையின் அமலாக்க அதிகாரிகளும் அத்தகைய நூறு படக்கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

