புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

2 mins read
78b01d34-d04f-4cb1-aea0-a6a8f860e212
மலேசியாவின் சில பகுதிகளில் வறண்ட வானிலை காரணமாகக் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: ஆசியான் உறுப்பு நாடுகள், எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவின் சில பகுதிகளில் வறண்ட வானிலை காரணமாகக் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள வேளையில் அவரின் கோரிக்கை வந்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் புகைமூட்டமில்லாத ஆசியானை அடைவதற்கான வட்டார இலக்கில் மலேசியா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டின் இயற்கை வள, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசஃப் குருப் கூறினார்.

ஆசியான் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹோர்னுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அனுப்பிய அதிகாரபூர்வச் செய்தியில் மலேசியா தனது நிலையைத் தெரியப்படுத்தியதாக அவர் சொன்னார்.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு நிர்வாகக் கட்டமைப்பின்படி, சனிக்கிழமை காலை 8 மணிக்கு மலாக்காவிலும் சரவாக்கிலும் உள்ள 11 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத்தரக் குறியீட்டைப் பதிவு செய்துள்ள நிலையில் மலேசியாவின் அழைப்பு வந்துள்ளது.

செரியன் நகரத்தில் அந்தக் குறியீடு ஆக அதிகமாக 190 எனப் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து கூச்சிங் (181), சமரஹான் (177), ஸ்ரீ அமான் (174), சாரிகெய் (172), சிபு (160), பிந்துலு (157), சமலாஜு (156), முக்கா (156), மிரி (152), மலாக்காவில் உள்ள புக்கிட் ரம்பாய் (140) ஆகிய பகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆசியானின் தென்புறத்தில் நீடித்துவரும் வறண்ட வானிலை காரணமாகக் காட்டுத் தீச்சம்பவங்களும் புகைமூட்ட நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாகத் திரு.குருப் தெரிவித்தார்.

வரும் மாதங்களில் ‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் காரணமாய்ப் படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று அவர் கூறினார்.

“தற்போது ஆசியான் உறுப்பு நாடுகளின் எல்லைகளுக்குள் தீச்சம்பவங்கள் கட்டுக்குள் இருந்தாலும் எல்லை தாண்டிய புகைமூட்ட ஆபத்தைக் கையாள வட்டார அளவில் கூட்டுத் தயார்நிலையும் கூடுதல் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது,” என்று திரு.குருப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

தீ பரவாமல் தடுக்க அதிக ஆபத்துள்ள பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் காட்டுத்தீக் கண்காணிப்பை அதிகரிக்கவும் திறந்தவெளியில் எரிப்பதற்கான தடைகளை நடைமுறைப்படுத்தவும் திறம்படத் தீயணைக்கும் தயார்நிலையை உறுதி செய்யவும் ஆசியான் உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், புகைமூட்டம் காரணமாக இந்தோனீசியாவின் மேற்குக் கலிமந்தான் மாநிலத்தில் உள்ள சிங்க்காவாங் விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகளும் சனிக்கிழமை ரத்துச் செய்யப்பட்டன.

உள்நாட்டு விமானச் சேவைகளை அந்த விமான நிலையம் கையாள்கிறது. விமானப் பயணங்களின் பாதுகாப்பைக் கருதி அண்மை முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஆசியான்புகைமூட்டம்காற்றுத்தரம்தூய்மைக்கேடு