கோலாலம்பூர்: மலேசியாவும் கம்போடியாவும் தங்களது இருதரப்புப் பாதுகாப்பு ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வானூர்தி தொழில்நுட்பம் உட்பட அடர்ந்த வனப்பகுதி போர்முறைப் பயிற்சி போன்ற புதிய நவீனத் துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.
மலேசியப் பாதுகாப்பு அமைச்சர் முகமது காலித் நோர்டின், கம்போடியாவுக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தின்போது, அந்நாட்டுப் பிரதமர் சாம்டேக் திபதி ஹுன் மானேட்டை நோம்பென்னில் உள்ள அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து முதன்மையாக ஆலோசிக்கப்பட்டது.
பிலிப்பீன்சில் நடைபெறவுள்ள ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார அமைதி நாடும் பாதுகாப்பு
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட அமைச்சர் முகமது காலித், வட்டாரப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஆசியானின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
தென்சீனக் கடலில் அமைதி, நிலைத்தன்மை அனைத்துலக விதிகளைப் பேணுவதற்கு ‘நடத்தை விதிகளை’ விரைந்து இறுதி செய்வது அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கம்போடியத் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் தீ சீஹாவையும் அமைச்சர் காலித் சந்தித்துப் பேசினார்.
மலேசியாவின் தேசியப் பாதுகாப்பு உத்தியின்படி, ஆசியான் உறுப்பு நாடுகளுடன் பலமான கூட்டாண்மையை உருவாக்குவதே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும் என மலேசியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


