கோலாலம்பூர்: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிஸ்னஸ் (ஜிஎஸ்ஐபி) எனும் இஸ்லாமிய சமய நிறுவனத்துடன் தொடர்புடைய 22 பேர் மீது மலேசிய நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோத கும்பலாக இருந்து குற்றச் செயல்களைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
கள்ள பணத்தை நல்ல பணமாக்கியது, ஆள் கடத்தல், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு எதிராக மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினர்.
அந்த நிறுவனம் நடத்தி வந்த சிறார் பராமரிப்பு இல்லங்களிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட சமய அமைப்புடன் ஜிஎஸ்ஐபி நிறுவனத்துக்குத் தொடர்பு இருப்பதாக மலேசியக் காவல்துறை கூறுகிறது.
இதை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 23ஆம் தேதியன்று ஜிஎஸ்ஐபி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நஸ்ருதீன் முகம்மது அலி மீதும் மற்ற உறுப்பினர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டிலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

