அலோர் ஸ்டார்: மலேசியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கும்பலின் தலைவர் என்று நம்பப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தில் உள்ள குவாலா மூடா வட்டாரத்தின் கம்போங் சுங்காய் என்ற பகுதியைச் சேர்ந்த 37 வயது ஜி. ரமேஷ், ‘ரமேஸ் கேங்’ என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதிவரை குற்றக் கும்பலில் அவர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரமேஷின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்தாண்டிலிருந்து 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.
ரமேஷ்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நீதிபதி ஷர்மிலா அப்துல் சமாட் நீதிமன்றத்தில் வாசித்தார். அவற்றைப் புரிந்துகொண்டதைக் குறிக்கும் வகையில் ரமேஷ் தலை அசைத்தார்.
மே 22ஆம் தேதி, ‘ஒப் திகா’ என்ற நடவடிக்கையின்கீழ் ரமேஷ் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்கள் இதற்குமுன் தெரிவித்தன. இந்தியாவையும் தாய்லாந்தையும் சேர்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மூலம் அது சாத்தியமானதாக அவை குறிப்பிட்டன.
பேங்காக்கிலிருந்து ஹைதராபாத்திற்குச் சென்றுகொண்டிருந்த ரமேஷ், விமானத்தில் கைதுசெய்யப்பட்டு இருநாட்டு அதிகாரிகளின் உதவியுடன் மலேசியாவிற்குக் கொண்டுவரப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை இயக்குநர் திரு எம். குமார் தெரிவித்தார்.

