மலேசியா: ஓடும் காரின் கதவை குழந்தை திறந்ததால் ஆறு வாகனங்கள் மோதல்

மலேசியா: ஓடும் காரின் கதவை குழந்தை திறந்ததால் ஆறு வாகனங்கள் மோதல்

1 mins read
6530536a-f650-4ed9-a8aa-1f1d95ed5547
விபத்தைக் காட்டும் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம். - படம்: IJUL PAKNGAH/ FACEBOOK

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் போக்குவரத்து நிறைந்த சாலையில் திடீரென ஒரு காரின் கதவு திறந்ததில் ஆறு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் இடதுபுறக் கதவை காருக்குள் இருந்த குழந்தை திறந்ததால் அந்த விபத்து நிகழ்ந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

ஜாலான் துன் ரசாக் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்தத் தகவல்களை கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் முகம்மது ஸம்ஸுரி முகம்மது இசா, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“காரின் அருகே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடுதிப்பென்று திறக்கப்பட்ட கார் கதவில் மோதியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி சாலையில் விழுந்தார். அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

“மற்றொரு மோட்டார் சைக்கிளும் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதனை ஓட்டிய 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் சிறிய காயங்களுடன் தப்பினார்,” என்றார் அவர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதியதால் அவற்றுப் பின்னால் வந்த மேலும் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

குழந்தைகள் தவறுதலாக கதவைத் திறக்காமல் இருக்க காரில் உள்ள பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்படாமல் இருந்தது, விசாரணையில் தெரிய வந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்