தியான்ஜின்: தொழில்நுட்ப, தொழில்சார் கல்வி, பயிற்சியில் (டிவிஇடி) மலேசியா - சீனா இடையிலான கூட்டுறவு, மலேசியர்களுக்கு ஆயிரக்கணக்கான பயிற்சி வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளது.
தற்போது அந்தப் பங்காளித்துவம், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் உயர் மதிப்புமிக்க வேலைகளுக்குத் தேவையான திறனாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் 5,125 பயிற்சி வாய்ப்புகளும், இவ்வாண்டில் மேலும் 2,500 பயிற்சி இடங்களும் அப்பங்காளித்துவம் மூலம் பெறப்பட்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அதனுடன், செயல்முறைவழி கற்றலுக்காக மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயிற்சிக் கருவிகளும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதலீடுகளும் திறனாளர் மேம்பாடும் இணைந்து மேம்படுவதை உறுதிசெய்ய, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்பத் திறன் மேம்பாட்டை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அக்கூட்டுறவு வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் தியான்ஜின் மெய்ஜியாங் மாநாட்டுக் கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற ‘உலக தொழில்சார் பயிற்சி, தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டு மாநாடு 2026’ நிகழ்வில் அவர் முக்கிய உரையாற்றினார்.
“இந்தச் சாதனைகள் நமது இளையர்களுக்கு என்ன வழங்குகின்றன என்பதுதான் எனக்கு மிக முக்கியம். புதிய திறன்கள், வலுவான வாழ்க்கைத்தொழில், மேம்பட்ட வாழ்க்கை ஆகியவையே அவை,” என்றார் அவர்.
நாட்டின் ‘டிவிஇடி’ மேம்பாட்டின் அடுத்த கட்டம் உயர்நிலைத் தொழில்சார் பயிற்சியில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
ஊழியர்களை உயர் மதிப்புமிக்க வேலைகளுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல், தானியக்கத் தொழில்நுட்பம், பகுதிமின்கடத்திகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என்றும் மலேசியாவின் தேசிய ‘டிவிஇடி’ மன்றத்தின் தலைவருமான அகமது ஸாஹிட் கூறினார்.
