பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நகரவாசிகள் பலர், தங்கள் குடும்பங்களைச் சந்திக்க சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் பலர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். உள்ளூர் நில, ஆகாய எல்லைகளில் நுழைவுச்சீட்டுகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் பொறுமை கலந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
சீனப் புத்தாண்டு காலத்தில் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதலான 102 ‘ரெட்-ஐ’ (red-eye) விமானப் பயணங்கள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூர், சாபா, சரவாக் ஆகியவற்றுக்கிடையே ஒரு வாரத்தில் மொத்தம் 219 விமானச் சேவைகள் வழங்கப்பட்டன.
கூடுதல் விமானச் சேவைகள் வழங்கப்படுவது, பயணிகளுக்குக் கூடுதல் வசதி ஏறப்படுத்தித் தருவதுடன் பண்டிகைக் காலத்தில் காணப்படும் ஒற்றுமை உணர்வுக்கு மெருகூட்டும் என்றார் மலேசிய ஆகாயத்துறைக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இஷாம் இஸ்மாயில்.
முன்னதாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்திலிருந்து இரண்டு ‘ரெட்-ஐ’ விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட ஏற்பாடு செய்யப்பட்ட சடங்கில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கலந்துகொண்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் எல்லா வாழ்க்கைப் பின்னணிகளையும் சேர்ந்த மலேசியர்கள் கூட்டமாகக் காணப்பட்டனர். அதேபோல், தாசிக் சிலந்தானில் உள்ள பெர்செப்பாடு சிலாத்தான் பேருந்து முனையத்தில் கூட்டம் அலைமோதியது காணப்பட்டது. ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு அங்கு இத்தகைய கூட்டம் குவியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் சீனப் புத்தாண்டு விடுமுறை காலம், பள்ளி விடுமுறை காலம் வரும் அதே காலகட்டத்தில் வருகிறது.