கோலாலம்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல வரைவுத் திட்டத்தை இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்குவதில் மலேசியா உறுதியாக உள்ளதென மலேசியப் பொருளியல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தத் திட்ட விவரங்களை விரைந்து வெளியிடுமாறு ஜோகூர் மாநில அரசாங்கம் நெருக்குதல் தந்தபோதிலும், மலேசிய-சிங்கப்பூர் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது அதனை வெளியிட, தான் கடப்பாடு கொண்டிருப்பதாக அமைச்சு சனிக்கிழமை (ஜூலை 4) தெரிவித்தது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல வரைவுத் திட்டத்தை காலநேரத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதைத் தவிர்த்து அதனால் ஏற்படும் பொருளியல் விளைவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மது நசிர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் சந்தை மீதான உள்நாட்டு, அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுவானதாக நீடிப்பதை முதலீட்டுத் தரவுகள் காட்டுவதாக அவர் கூறினார்.
அந்தத் திட்டம் மலேசியாவின் பேரளவிலான தொழில்துறையையும், சிங்கப்பூரின் நிதி வலிமையையும் இணைத்து வட்டார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்று அவர் இரு நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான பெருந்திட்டத்துக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அந்தத் திட்டத்தை இணைந்து வெளியிட உள்ளனர். வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2026ல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று திரு கடந்த புதன்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் திரு அக்மல் தெரிவித்திருந்தார்.
அந்தத் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என ஜோகூர் மாநில இடைக்கால முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி வலியுறுத்தியதைத் தொடர்ந்து திரு அக்மலின் அண்மைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“வரைவுத் திட்டத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒப்புதல் தேவையில்லை. மாறாக, சிங்கப்பூருடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளைப் பெறும் செயல்முறை மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் செயல்முறை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது,” என்று திரு ஓன், சனிக்கிழமை தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

