கோலாலம்பூர்: சாலைக் கட்டணம் செலுத்துவிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
வரும் அக்டோபர் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ‘இபிட்மோட்டார்.காம்’ சமூக ஊடகப்பக்கத்தில் காணப்படும் பதிவு பொய் என்று ஆணையம் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இத்தகைய பொய்த்தகவல்கள், மோட்டார் சைக்கிளோட்டிகளைத் தேவையில்லாமல் பதற்றமடையச் செய்வதுடன் அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் ஆணையம் எச்சரித்தது.
வாகன எண் பலகையை அடையாளம் காணும் தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறந்த முறையைத்தான் தற்போது மலேசியாவில் சோதிக்கப்பட்டு வருவதாக ஆணையம் கூறியது.
இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால் இந்தக் கட்டமைப்பு, நெடுஞ்சாலைகள் பலவற்றில் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
புதிய அமைப்பினால் சாலைப்போக்குவரத்துக் கட்டமைப்பு மேம்பட்டு, சாலைக் கட்டணச் சாவடிகளுக்கு அருகிலுள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குக் கூடுதல் வசதியைத் தருகிறது.
அதிகாரபூர்வத் தகவல்ககளை மட்டும் கவனத்தில் கொள்ளும்படி ஆணையம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.