பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களில் ஏறத்தாழ 30 விழுக்காடு மரணங்கள் பிறக்கும்போதே ஏற்படும் குறைபாடுகளுடன் தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, இந்த வயதுப் பிரிவினரிடையே மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது பொதுவான காரணமாக இது உள்ளது. நரம்பு மண்டலக் குறைபாடுகள் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் இதற்கு அடுத்தபடியாக உள்ளன.
நாடு முழுவதும் பதிவாகும் பிறப்புக் குறைபாடுகளில் 55 விழுக்காடு மரபணு சார்ந்த கோளாறுகள் ஆகும். இதில் டவுன் சிண்ட்ரோம், எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் மற்றும் படாவ் சிண்ட்ரோம் போன்றவை பொதுவானவை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பிறக்கும்போது ஏற்படும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் தரவுகளை அமைச்சு தனியாகச் சேகரிப்பதில்லை.
“தற்போதைய அறிக்கையில் முறைகள் முக்கியமாக இறப்பு விகிதங்களையே கவனத்தில் கொள்கின்றன. இதில் பிறக்கும்போது இறக்கும் சிசுக்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்கள் மட்டுமே அடங்கும்,” என்று அது கூறியுள்ளது.
தற்போது, பிறக்கும்போது ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கென சிறப்பு தேசியத் திட்டம் எதுவுமில்லை. இருப்பினும், தாய்-சேய் நலச் சேவைகளுடன் தடுப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சுகாதார மதிப்பீடுகள் அடங்கும்.
பிறக்கும்போது தவிர்க்க முடியாதவை என்றாலும், குடும்பங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சில காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
‘டவுன் சிண்ட்ரோம்’ போன்ற குறைபாடுகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதவை. இவை தற்செயலான மரபணு மாற்றங்களால் ஏற்படுகின்றனவே தவிர, பெற்றோரின் தவறுகளால் அல்ல.
தொடர்புடைய செய்திகள்
35 வயதுக்கும் முன்பே கர்ப்பம் தரிப்பது, ‘குரோமோசோம்’ தொடர்பான கோளாறுகளின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
கர்ப்பத்தின் பத்தாவது வாரத்திலேயே செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே விவரங்களைக் கண்டறிந்து சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
இருப்பினும், சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட மீதமுள்ள 45 விழுக்காட்டுக் குறைபாடுகளில் தற்காக்கக்கூடிய அம்சங்கள் இருப்பதாக குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் மூசா முகம்மது நூர்தீன் குறிப்பிட்டார்.

