தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

16 வயதிற்குட்பட்டோர் கைப்பேசியைப் பயன்படுத்தத் தடைவிதிக்க மலேசியா பரிசீலனை

2 mins read
பள்ளிகளில் அதிகரித்துவரும் வன்முறையைத் தடுக்க நடவடிக்கை
eb83e898-92f1-42a3-ab08-c70aa97a325f
சில நாடுகள் 16 வயதிற்குட்பட்டோர் திறன்பேசியைப் பயன்படுத்த அனுமதித்தாலும் அதில் மலேசியா கண்டிப்பாக இருக்க வேண்டும் எனத் தாம் நினைப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: பள்ளிகளில் வன்முறை அதிகரித்து வருவதை அடுத்து, கைப்பேசி பயன்படுத்த 16 வயதிற்குட்பட்டோர்க்குத் தடைவிதிப்பது உள்ளிட்ட பல பரிந்துரைகள் அமைச்சரவைக் கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டுகளின் தாக்கம் கவலைக்குரிய நடத்தைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கண்டறிந்துள்ளோம்,” என்று திரு அன்வார் கூறினார்.

நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பை அதிகப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சும் காவல்துறையும் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோரையும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தையும் உள்ளடக்கிய அறநெறிக் கல்வி தொடர்பான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“முதலாவது, பாதுகாப்பு பற்றியது; இரண்டாவது, சமூக ஊடகம் தொடர்பானது; மூன்றாவது, குழந்தைகளைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் பெற்றோரையும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தையும் உள்ளடக்கிய அறநெறிக் கல்வி சார்ந்தது.

“அமைச்சரவையும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்கும் இதுபற்றி விரிவாகக் கூறுவர். பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குவர் என நம்புகிறேன்,” என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) புத்ராஜெயாவிலுள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகையை முடித்தபின் செய்தியாளர்களிடம் பிரதமர் அன்வார் கூறினார்.

கல்வி, குழந்தைகள் சார்ந்த இத்தகைய கடுமையான விவகாரங்களில் விரிவாக ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கல்வி, ஒழுங்கு நடவடிக்கைகள், பொதுமக்களின் கவலைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை இடம்பெற்றதாகத் தெரிகிறது.

“சில நாடுகள் 16 வயதிற்குட்பட்டோர் திறன்பேசியைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. ஆயினும், இவ்விவகாரத்தில் நாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்று திரு அன்வார் கூறினார்.

இம்மாதம் 14ஆம் தேதி காலை 9.10 மணியளவில் பெண்கள் கழிவறையிலிருந்து வெளியான 16 வயதுச் சிறுமியை 14 வயதுப் பையன் ஒருவன் கத்தியால் குத்திவிட்டான். நெஞ்சிலும் கழுத்திலும் கடுமையாகக் காயமடைந்த அச்சிறுமி பின்னர் இறந்துவிட்டார்.

அந்த 14 வயதுச் சிறுவன் தற்போது ஏழு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்