ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் சுகாதார அமைச்சு, ஈத்துவப்போர் சட்டத்தை (Good Samaritan Law) அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தி ஸ்டார் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்ட ரீதியாக பின்விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்ற அச்சமின்றி பிறருக்கு அவசர உதவியில் ஈடுபட வகைசெய்ய அச்சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, உதவி செய்யும்போது தெரியாமல் ஒருவருக்கு ஏதேனும் ஆபத்து விளைவித்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடராமல் இருப்பதற்கு இந்த ஈத்துவப்போர் சட்டம் வழிவிடக்கூடும்.
ஈத்துவப்போர் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கெஃப்லி அகம்மது குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெறவுள்ள சந்திப்பில் இதுகுறித்து பேசப்போவதாக அவர் தெரிவித்தார்.
“எப்போது, எப்படி இது செயல்படுத்தப்படலாம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதேவேளை, மற்ற நாடுகள் செய்திருப்பதைப்போல் அதை அமல்படுத்த முடிவெடுப்பது முக்கியம்,” என்று அவர் சுட்டினார்.
“இந்த ஈத்துவப்போர் சட்டம் வரும் 15வது நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் காலத்திலாவது நடப்பில் இருக்கவேண்டும். நமக்கு இன்னும் மூவாண்டுகள் இருக்கின்றன,” என்றும் டாக்டர் ஸுல்கெஃபிலி சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) மாநாடு ஒன்றில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் சில ஆசிய நாடுகள் அச்சட்டத்தை அமல்படுத்திவிட்டதாக அவர் சொன்னார். மலேசியா, அவற்றை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தற்போது தேசிய அளவில் ஈத்துவப்போர் சட்டம் நடப்பில் இல்லை. ஆனால், பொதுச் சுகாதாரம், அவசர உதவி ஆகியவற்றின் தொடர்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை, விவாதங்களில் அதுபற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
திடீர் மாரடைப்பு போன்றவற்றுக்கு ஆளாகி உயிர் பிழைப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவசர உதவி முறைகளை மேம்படுத்துவது ஆகிய இலக்குகளை மலேசியா கொண்டுள்ளது. அந்த வகையில், ஈத்துவப்போர் சட்டம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி உயிர் பிழைப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக டாக்டர் ஸுல்கெஃபிலி தெரிவித்தார். நடவடிக்கை ஏதும் எடுக்காத வேளைகளில் அப்பிரச்சினைக்கு ஆளான ஒரு விழுக்காட்டினர் மட்டுமே உயிர் பிழைத்தனர் என்று அவர் சுட்டினார்.

