கோலாலம்பூர்: விமானிகளின் மனநலனுக்கும் உடல்நலனுக்கும் ஆதரவளிக்க தேசிய விமானி ஆதரவுத் திட்டம் தொடங்குவது குறித்து மலேசியா ஆலோசித்துவருவதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
இதன் தொடர்பில் கேட்கப்பட்ட நாடாளுமன்றக் கேள்விக்கு அமைச்சு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தது.
மலேசிய விமானத் துறை குழுமம் ஏற்கெனவே அதன் ஊழியர்களுக்கு சக ஊழியர் ஆதரவுத் திட்டத்தை (peer support programme) நடத்தியதாக அமைச்சு பதிலில் குறிப்பிட்டது. அத்திட்டத்தில் முதலில் விமானிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் நலூரி எனும் மனநல, உடல்நலத் தளத்தின் மூலம் நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
“விமானிகளுக்கு ஆதரவளிக்கும் முறைகள் ஆக்கபூர்வமாக இருப்பதை உறுதிசெய்ய ரகசியத்தன்மை, சுயேச்சையாகச் செயல்படுவது, நம்பகத்தன்மை ஆகியவை முக்கிய அம்சங்கள் என்பதை அத்திட்டம் வலியுறுத்தவும் செய்கிறது,” என்றும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.
தேசிய அளவில் விமானிகளுக்கு இதுபோன்ற ஆதரவளிப்பது குறித்து மலேசியா இதுவரை தேசிய அளவில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதேவேளை, மலேசிய சிவில் விமானத்துறை ஆணையம் விமானிகளின் மனநலம், உடல்நலம் குறித்து பல மனநல விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்தியதோடு பல்வேறு விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டிருக்கிறது.
மேலும், மனநலனைக் கண்காணிப்பது, பாதுகாப்பான வேலையிடச் சூழல்கள் இருப்பது, ஊழியர்களுக்கு ஆதரவுச் சேவைகள் கிடைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அறிவுரையை மலேசிய சிவில் விமானத்துறை ஆணையம் அத்துறைக்கு வழங்கியுள்ளது.
