செப்பாங்: மலேசியாவில் காவல்துறையைத் தாக்கிய திருடர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தேசா விஸ்டா பகுதியில் நேர்ந்தது. கொல்லப்பட்ட திருடர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாலை மூன்று மணியளவில் திருடர்கள் வீடு புகுந்த கொள்ளையடிக்க முயன்றனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட வீட்டின் அபாய ஒலி செயல்படுத்தப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாக புக்கிட் அமான் குற்ற விசாரணைப் பிரிவின் (சிஐடி) இணை ஆணையர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
“35லிருந்து 40 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், சுடப்படுவதற்கு முன்பு காவல்துறையினரை அரிவாள்களால் தாக்கினர்,” என்று திரு ஃபாடில் சம்பவ இடத்தில் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்கள், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளையடித்து வந்ததாக அவர் கூறினார். இவற்றில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் (300,600 வெள்ளி) இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
மலேசியாவின் சுங்கை புலோ பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடித்தபோது திருடர்கள் சிலரைத் தாக்கியதாகவும் தரு ஃபாடில் சொன்னார்.
“சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து 17 கொள்ளைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. ரமலான் மாதத்தில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களும் அவற்றில் அடங்கும்,” என்றார் அவர்.
கொள்ளையடித்த பிறகு திருடர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவர்; பின்னர் தொடர்ந்து கொள்ளையடிக்க அவர்கள் மீண்டும் மலேசியா வருவர் என்றும் திரு ஃபாடில் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“இதே கும்பலைச் சேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இரு சந்தேக நபர்களை நாங்கள் தேடி வருகிறோம்,” என்று திரு ஃபாடில் குறிப்பிட்டார்.

