சிப்பாங்: மலேசியாவில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் 210 கிலோ கஞ்சா மொட்டு போதைப்பொருளை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைப்பற்றி உள்ளனர்.
விமான நிலையத்தின் தடையற்ற வர்த்தகப் பிரிவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட அந்தப் போதைப்பொருளின் மதிப்பு 20.57 மில்லியன் ரிங்கிட் (S$6 மில்லியன்) என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொட்டலத்திலும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளிலும் மறைத்து கஞ்சா மொட்டுகளையும் கஞ்சா இலைகளையும் கடத்தும் முயற்சியைத் தாங்கள் முறியடித்துவிட்டதாக அவர்கள் கூறினர்.
சென்ற மார்ச் மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து மலேசிய சுங்கத் துறையின் தற்காலிக உதவித் தலைமைச் செயலாளர் டாக்டர் அகமது தௌஃபிக் சுலைமான் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) செய்தியாளர்களிடம் விளக்கினார்.
“கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் உள்ள தடையற்ற வர்த்தகப் பிரிவில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
“அப்போது, அங்கு இருந்த சரக்குப்பெட்டி ஒன்றில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“அந்தச் சரக்குப்பெட்டி தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அனுப்பும் வழியில் மலேசியா வந்து இருந்தது.
“அந்தச் சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை,” என்று டாக்டர் அகமது கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு கிலோ கஞ்சா மொட்டின் விலை 98,000 ரிங்கிட் என்றும் ஒரு கிலோ கஞ்சா இலையின் விலை 33,000 ரிங்கிட் என்றும் மதிப்பிடப்படுகிறது.
கஞ்சாச் செடி முளைக்க கஞ்சா மொட்டு பயன்படுத்தப்படலாம் என்பதால் அதற்குக் கள்ளச் சந்தையில் அதிக விலை உள்ளதாக டாக்டர் அகமது தெரிவித்தார்.
“மலேசியா வழியாக இந்த அளவுக்கு அதிகமான கஞ்சாவைக் கடத்த முயன்றவர்கள் யார் என்ற விசாரணையைக் காவல்துறை நடத்தி வருகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் காவல்துறையுடன் சுங்கத்துறை இணைந்து செயல்படும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள ஆக அதிகமான போதைப்பொருள் சம்பவம் இது.