சீனப் புத்தாண்டுக் காலத்தில் சாலைக் கட்டணங்களைக் குறைக்க மலேசியா முடிவு

சீனப் புத்தாண்டுக் காலத்தில் சாலைக் கட்டணங்களைக் குறைக்க மலேசியா முடிவு

2 mins read
7f0233ca-5651-4645-9ca7-08784cdbcd52
மலேசியாவில் ‘ஜாலான் பெட்டாலிங்’ என்று வழங்கப்படும் சைனாடவுனில் அண்மையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இம்மாதம் (பிப்ரவரி) 13ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாளுக்கு அதாவது 21ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: சீனப் புத்தாண்டுக் காலத்தில் நெடுஞ்சாலைக் கட்டணங்களில் தள்ளுபடி கொடுப்பதற்கு மலேசிய அமைச்சரவை இணங்கியுள்ளது.

குறிப்பிட்ட சில உணவுப்பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குரிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் கூறினார்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்காலத்திற்கான நெடுஞ்சாலைக் கட்டணத் தள்ளுபடிகளின் விவரங்களைப் பொதுப்பணி அமைச்சு அறிவிக்கும் என்றார் அவர்.

பொதுமக்களின் பயணச் செலவைக் குறைப்பதற்கு அது உதவும். விழாக்காலத்தில் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்குத் திரும்புவதற்கான தேதிகளையும் நேரத்தையும் திட்டமிடவும் அது கைகொடுக்கும்.

வாகனத்தின் வகையைப் பொறுத்து, தள்ளுபடி அமைந்திருக்கும். அதன் விவரங்களைப் பொதுப்பணி அமைச்சு விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல அம்சங்களில் அதுவும் ஒன்று.

விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இம்மாதம் (பிப்ரவரி) 13ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாளுக்கு அதாவது 21ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும் என்று உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் ஆர்மிஸான் முகம்மது அலி அமைச்சரவையிடம் கூறியிருக்கிறார். அதனைத் திரு ஃபாஹ்மி தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான சீனப் புத்தாண்டு விழாக்கால அதிகபட்ச விலைத் திட்டத்தின்கீழ் மொத்தம் 16 பொருள்கள் வரும்.

“விழாக்காலத்தில் விலை நிலையாக இருப்பதையும் நியாயமற்ற விலையேற்றத்திலிருந்து பயனீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்வதே திட்டத்தின் நோக்கம். அமைச்சு விரைவில் மேல் விவரங்களுடன் அறிக்கையொன்றை வெளியிடும்,” என்று திரு ஃபாஹ்மி சொன்னார்.

இதற்கிடையே, முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் (பிப்ரவரி) 13ஆம் தேதியே அத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனப் புத்தாண்டு விழாக்காலத்தில் ஏறக்குறைய 3.27 மில்லியன் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிவரை போக்குவரத்துத் தடங்களை மூடும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்