2026ல் மோசடி சார்ந்த 100,000 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கிய மலேசியா

2026ல் மோசடி சார்ந்த 100,000 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கிய மலேசியா

2 mins read
e0f28b1a-2de3-4141-8c56-4a474cd9f987
மலேசிய தொடர்புத்துறை துணை அமைச்சர் டியோ நீ சிங். - படம்: த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: இவ்வாண்டு ஜூலை 15ஆம் தேதி வரையில் சமூக ஊடகங்களில் இருந்து 99, 693 மோசடிகள் சார்ந்த பதிவுகளை நீக்கியுள்ளதாக மலேசிய தொடர்புத் துறை துணை அமைச்சர் டியோ நீ சிங் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் நீக்கப்பட்ட 98,503 பதிவுகளை விட அதிகம் எனவும் அவர் ஜோகூரில் தாமான் தேசாய் ஸ்கூடாய் சமூக மன்றத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் விவரித்தார்.

இவ்வாண்டு மட்டும் மெட்டா, டிக்டாக், யூடியூப் போன்ற சமூக ஊடக நிர்வாகங்களுக்கு 106,268 மோசடிகள் சம்பந்தப்பட்ட பதிவு நீக்கக் கோரிக்கைகள் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது என்றார் அவர். கடந்த ஆண்டு முழுவதும் அவ்வாறான 102,113 கோரிக்கைகளே அந்நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டன என்பதையும் அவர் ஒப்பிட்டார்.

மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அத்தகைய கோரிக்கைகளை வைத்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் முடிவு சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிர்வாகங்களுக்கே உள்ளது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும் மோசடி சார்ந்த வழக்குகளுக்கு சமூக ஊடக நிர்வாகங்கள் 90 விழுக்காடு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் மலேசியாவின் தேசிய மாதம் குறித்தும் பேசினார். தேசியக் கொடியை முறையாக பறக்கவிடும் விதிகளை அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

அரசாங்கத்தின் தகவல் துறை இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை ‘ஒரு இல்லம் ஒரு தேசியக் கொடி’ என்ற இயக்கத்தை நடத்தி மக்கள் தேசியக் கொடியை பறக்கவிட ஊக்குவிப்பதை அவர் நிகழ்ச்சியில் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசமூக ஊடகம்மோசடிநடவடிக்கைநிர்வாகம்ஒத்துழைப்புதகவல் தொழில்நுட்பம்அமைச்சுஅமைச்சர்துணை