கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து மியன்மார் அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், போர் நடந்து வரும் மியன்மாருக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவது பாதுகாப்பற்றது என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
விருப்பத்தின் பேரில் அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டத்தை மலேசியாவின் உள்துறை அமைச்சு கடந்த வாரம் உறுதிசெய்தது.
அதன்படி, செப்டம்பர் 29ஆம் தேதி 1,476 அகதிகள் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
மலேசியாவின் உள்ளூர் சமூகங்களிடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 5,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள மியன்மார் சம்மதித்துள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னதாகக் கூறியிருந்தார்.
மியன்மாரில் ஆயுதப் போராட்டமும் வன்முறையும் தொடர்வதால், அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் திரும்புவது சாத்தியமில்லை என்று அகதிகள் ஆணையம் தெரிவித்தது.
உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் ஆபத்து உள்ள எந்தவொரு நாட்டுக்கும் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என அனைத்துலகச் சட்டம் கூறுவதையும் அது சுட்டிக்காட்டியது.
அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு முன்னதாக அவர்களின் பாதுகாப்புத் தேவைகளைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆணையம், இது தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
அகதிகள் ஆணையத்தின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவிக்க மலேசிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் அகதிகளின் சுயவிருப்பத்தின் பேரிலேயே நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி மாத நிலவரப்படி, மலேசியாவில் மியன்மாரைச் சேர்ந்த 193,800 அகதிகள் உள்ளனர்.


