அரச குடும்ப உறுப்பினர் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள், மலேசியா அதிருப்தி

அரச குடும்ப உறுப்பினர் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள், மலேசியா அதிருப்தி

2 mins read
56ee2b40-52da-4889-a8ab-3e81192e5bb8
சமூக ஊடகமான மெட்டாமீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுவதாக மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறியுள்ளார். - படம்: ஃபாமி ஃபட்சில் ஃபேஸ்புக்
Google News Preferred Icon

மலேசிய ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள போலி கணக்குகளை அகற்றத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மலேசியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இதனைத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பெருநிறுவனத்திடம் இந்தப் பிரச்சினை பல முறை சுட்டிக் காட்டப்பட்டதாகவும் ஆனால் அதற்கு எதிராக அந்நிறுவனம் எடுத்த நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மெட்டாமீது சாத்தியமான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது ஆராயப்படுவதாக அவர் கூறினார்.

“இந்தப் பிரச்சினையை பலமுறை மெட்டாவிடம் எழுப்பியிருக்கிறோம். ஆனால் அந்நிறுவனம் மலேசிய ஆட்சியாளர்களை மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது,” என்றார் அவர்.

இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மிக முக்கியமானவர்கள் என அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தினரை மதிக்க வேண்டும் என்பதை அனைத்துலக தளங்களான ஃபேஸ்புக் போன்றவை புரிந்துகொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை ( மே 9) ஆயர் கேரோவில் நடைபெற்ற எஸ்பிஎம் சிறந்த மாணவர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்நிகழ்ச்சியை துணை உயர்கல்வி அமைச்சரும் ஹங் டுவா ஜெயா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆடம் அட்லி அப்துல் ஹலிம் தொடங்கி வைத்தார்.

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் பொதுமக்களின் புகார்கள் வழியாக 26 அரச குடும்ப உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி 15,296 போலி ஊடகக் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமாமன்னர்சுல்தான்மெட்டா