நஜிப் மீதான 1எம்டிபி குற்றச்சாட்டுகளைக் கைவிடுகிறது மலேசியா

2 mins read
da79dec4-e7de-4c58-a980-6303a6a8759e
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது 1எம்டிபி ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதும் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் மீதும் 1எம்டிபி ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கு மலேசிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1எம்டிபி ஊழல் தொடர்பில் நஜிப் சில விசாரணைகளை எதிர்நோக்குகிறார்.

மலேசிய அரசாங்க நிதியான 1எம்டிபியிலிருந்து கிட்டத்தட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.06 பில்லியன்) தொகை திருடப்பட்டதாக மலேசிய, அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

2009ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையில் உலகளாவிய நிலையில் அந்த ஊழல் நடந்தது.

2009ஆம் ஆண்டு மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த நஜிப், 1எம்டிபி நிதியை உருவாக்க உதவினார். அப்போது ஊழலிலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் மலேசிய மாமன்னர் தலைமையிலான அரச மன்னிப்புக் குழுவின் பரிந்துரையின்படி அந்தச் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

சென்ற மாதம் (அக்டோபர்), 1எம்டிபி ஊழலில் பங்குபெற்றதற்கு நஜிப் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அரசாங்க நிதியிலிருந்து சட்டவிரோதமாகப் பணம் மாற்றப்படுவது குறித்துத் தமக்குத் தெரியாது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, நஜிப் மீதும் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லா மீதும் கூட்டாக, ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர்கள், 6.6 பில்லியன் ரிங்கிட் (S$2 பில்லியன்) மதிப்பிலான அரசாங்க நிதி தொடர்பில் நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாகக் கூறப்பட்டது.

1எம்டிபி நிதிக்கும் அபுதாபி அரசாங்கத்துக்குச் சொந்தமான அனைத்துலகப் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்துக்கும் (IPIC) இடையிலான ஒப்பந்தம் தொடர்பில் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது.

இருவரும் தாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்று தொடர்ந்து நிராகரித்தனர்.

இந்நிலையில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவர்களைத் தற்காலிகமாக விடுவித்துள்ளது. அரசாங்கத் தரப்பு முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதும் நடைமுறைகள் தாமதமானதும் இதற்குக் காரணம் என்று அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு, நஜிப் மீதான எஞ்சியுள்ள வழக்குகள் குறித்த கேள்விகளை எழுப்புமெனக் கருதப்படுகிறது.

தண்டனைக் காலத்தின் எஞ்சிய பகுதியை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு நஜிப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அடுத்த ஆண்டு, சில வகைக் குற்றங்களுக்கு வீட்டுக் காவலை அனுமதிக்கும் புதிய சட்டம் அறிமுகம் காணும் என்று மலேசிய அரசாங்கம் சென்ற மாதம் கூறியது. ஆனால் அந்தச் சட்டம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைச் சிறையிலிருந்து விடுவிப்பதை இலக்காகக் கொண்டதன்று என்று அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்