பெட்டாலிங் ஜெயா: உடல்எடைக் குறைப்புக்குத் தீர்வாகக் கருதப்படும் ‘ஓஸெம்பிக்’ மருந்து மீதான மோகம் உலகெங்கும் அதிகரித்துள்ள வேளையில் மலேசியாவில் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கப் பயன்படுத்தப்படும் அந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மலேசிய மருந்துக்கடைகள் கூறுகின்றன.
மலேசிய மருந்தாளர்கள் சங்கத் தலைவர் அம்ராஹி புவாங், ‘ஓஸெம்பிக்’ மருந்துக்கான பற்றாக்குறையை உறுதிசெய்தார். நீரிழிவு பாதிப்பு இல்லாதோரும் உடல் எடையைக் குறைப்பதற்காக அந்த மருந்தை நாடுவது இதற்குக் காரணம் என்றார் அவர்.
‘ஓஸெம்பிக்’ மருந்து மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்றபோதும் நீரிழிவு நோய் இல்லாதவர்களும் எப்படியோ அதைப் பெறுவதை அவர் சுட்டினார்.
“மலேசியாவில் உடல் எடையைக் குறைப்பதற்கு ‘ஓஸெம்பிக்’ மருந்து அங்கீகாரம் பெறாத நிலையில் நீரிழிவு நோய் இல்லாத பலர் அதைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் கூறுகின்றன,” என்றார் திரு அம்ராஹி.
மருத்துவரின் கவனிப்பின்றி, ஒப்புதல் வழங்கப்படாத உடற்கோளாறுகளுக்கு மருந்துகளைப் பயன்படுத்துவது தவறு என்று அவர் எச்சரித்தார்.
‘ஓஸெம்பிக்’ மருந்தின் பக்க விளைவுகளில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைத்தலும் அடங்கும் என்று கூறிய திரு அம்ராஹி, அதனால் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றார்.
“தேவையற்ற பின்விளைவுகளைத் தடுக்க, மருந்துகளைச் சரியாகப் பயன்படுத்தும் விதம் குறித்துப் பொதுமக்கள் எப்போதும் மருந்தாளரை ஆலோசிப்பது அவசியம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உரிய மருத்துவப் பரிந்துரையின்றிச் சிலர் தாங்களாகவே ‘ஓஸெம்பிக்’ மருந்தைப் பயன்படுத்துவதும் இணையத்தில் வாங்குவதும் அதன் பற்றாக்குறைக்குக் காரணம் என்பதை வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.
மருந்து விநியோகிப்பாளர்கள் ஏற்கெனவே ‘ஓஸெம்பிக்’ மருந்தைப் பங்கீட்டு முறையில் வழங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ‘ஐஹீல்’ மருத்துவ நிலையத்தில் பணிபுரியும் இதயநோய் வல்லுநரான டாக்டர் வோங் டெக் வீ, ‘ஓஸெம்பிக்’ மருந்தை உடல் எடைக்குறைப்புக்காகப் பயன்படுத்திய 44 முதல் 47 விழுக்காட்டினருக்கு வாந்தியும் 30 முதல் 35 விழுக்காட்டினருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாகக் கூறினார்.
மேலும் 24 முதல் 30 விழுக்காட்டினருக்கு மலச்சிக்கலுடன் வாந்தியும் ஏற்பட்டதாகவும் இருப்பினும் மிதமான இத்தகைய அறிகுறிகள் காலப்போக்கில் குறைந்ததாகவும் டாக்டர் வோங் குறிப்பிட்டார்.
மனநிலையில் மாற்றம், மனஅழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, நீர்ச்சத்து குறைதல் உட்படப் பல்வேறு சிக்கல்கள் குறித்த மருத்துவ அறிக்கைகளையும் அவர் சுட்டினார்.

