கூலாய்: மலேசியாவின் தொடர்புத் துறை துணையமைச்சர் டியோ நீ சிங், பொதுமக்கள், குறிப்பாக இணைய மோசடிகளுக்கு ஆளானோர், 997 என்ற அவசர தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரச காவல்துறையின்கீழ் உள்ள தேசிய மோசடி நடவடிக்கை நிலையமாக அந்த அவசர தொலைபேசி எண் 24 மணி நேரம் சேவை வழங்கும் என்றார் அவர்.
இணைய மோசடிகள் அதிகரிப்பதை முன்னிட்டு தொலைபேசி எண் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி துரிதமாகக் கிடைக்கும் என்றார் திருவாட்டி டியோ.
மலேசியாவில் இவ்வாண்டு மட்டும் ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி விளம்பரம் தொடர்பான 46, 817 மோசடிகள் கண்டறியப்பட்டன.
997 என்ற எண்ணுக்கு விடுக்கப்படும் அழைப்புகள் அனைத்தும் இப்போதிருந்து காவல்துறையிடம் சமர்பிக்கப்பட்ட புகார்களாகக் கருதப்படும் என்ற திருவாட்டி டியோ, பாதிக்கப்பட்டோர் தனிப்பட்ட விதத்தில் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்றார்.
“இது பாதிக்கப்பட்டோரின் நேரத்தை மிச்சப்படுத்தும்,” என்று திருவாட்டி டியோ கூறினார்.
80 விழுக்காட்டு மோசடி விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் கண்டறியப்பட்டன என்றும் பெரும்பாலும் அவற்றில் பெரும்புள்ளிகளின் பெயர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு 6,297 போலி விளம்பரங்கள் சமூக ஊடகத் தளங்களிலிருந்து நீக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தாமும் அத்தகைய போலி விளம்பரங்களால் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட திருவாட்டி டியோ, முன்னாள் கல்வியமைச்சர் இலவச புத்தகங்களை வழங்குவதாக வந்த விளம்பரத்தில் தமது படம் பயன்படுத்தப்பட்டது என்றார்.
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் அந்த விளம்பரங்களை நீக்கியபோதும் இதர இணையத் தளங்கள் வழி அதே விளம்பரங்கள் பதிவேற்றப்பட்டன என்றார் அவர். அதைத் தொடரவிட்ட மெட்டா நிறுவனம்மீது எனக்கு வருத்தம் என்றார் திருவாட்டி டியோ.