பெட்டாலிங் ஜெயா: தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் அழிந்து வரும் விலங்குகளின் கடத்தல், சாதனை அளவை எட்டியுள்ளதால் 2025ஆம் ஆண்டில் சட்டவிரோத கிப்பன் குரங்கு வர்த்தகத்தில் அதிகம் சம்பந்தப்பட்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்துள்ளது.
வன வினங்குகளின் வர்த்தகம் குறித்த உலகளாவிய ஆலோசகரான டிராஃபிக் அமைப்பின் பகுப்பாய்வில், ஜனவரி 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை 336க்கும் மேற்பட்ட தனிப்பட்ட கிப்பன் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 2025ஆம் ஆண்டில் மட்டும் கைப்பற்றப்பட்டவை மொத்த எண்ணிக்கையின் 20 விழுக்காடாகும்.
உலக கிப்பன் குரங்கு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, கடத்தல் முறைகளில் கவலையளிக்கும் போக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவும் மலேசியாவும் சட்டவிரோத கிப்பன் குரங்கு வர்த்தகச் சங்கிலியில் அதிகரித்து வரும் முக்கிய இணைப்புகளாக மாறி வருவதையும், மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குள் கிப்பன் குரங்குகள் கடத்தப்படுவதையும் காட்டுகிறது.
“இந்தியாவில் வெளிநாட்டுச் செல்லப்பிராணிகள் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தால், இரு நாடுகளுக்கும் இடையே விமானப் பயணிகளின் பெட்டிகளில் கிப்பன் குரங்குகளைக் கடத்தும் எண்ணற்ற முயற்சிகள் இந்த மாற்றத்திற்கு ஓரளவு காரணமாகச் சொல்லப்படுகிறது. பல குரங்குகள் பயணத்தின் போது மடிகின்றன,” என்று ஆய்வு கூறியது.
மே மாதத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நபர்களிடம் ஏழு இறந்த கிப்பன் குரங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
“அவர்கள் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு ஒன்பது குரங்குகளை தங்கள் பயணப் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்துள்ளனர்,” என்று அறிக்கை மேலும் கூறியது.
கடந்த பத்தாண்டுகளில், மொத்தம் 83 விலங்கு பறிமுதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 139 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சுறுசுறுப்பு, இனச்சேர்க்கை, ஜோடிகளுக்கு இடையில் பாடப்படும் தனித்துவமான ஜோடிப் பாடல்களுக்குப் பெயர் பெற்ற சிறிய மனிதக் குரங்குகளான கிப்பன்கள், இந்தியா முதல் இந்தோனீசியா வரை 11 நாடுகளில் காணப்படுகின்றன.
இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட 20 இனங்களில் பெரும்பாலானவை இப்போது அழிந்துவருகின்றன. மேலும் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை அவற்றின் எண்ணிக்கையை விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளன.

