எல்லைக் கண்காணிப்பை வலுப்படுத்த ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது மலேசியா

எல்லைக் கண்காணிப்பை வலுப்படுத்த ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது மலேசியா

2 mins read
c82b12a2-90e9-4938-b5fc-bd15a26c4826
கடத்தலையும் எல்லை தாண்டிய மற்றக் குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் தலைமையகம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

அதற்காக ஆளில்லா வானூர்திகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைத் தலைமையகம் விரிவுபடுத்தி வருகிறது. பக்கத்து நாடுகளுடன் உளவுத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையும் அது முடுக்கிவிட்டுள்ளது.

கடத்தலையும் எல்லை தாண்டிய மற்றக் குற்றங்களையும் கட்டுப்படுத்துவது நோக்கம்.

எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதே காவல்துறையின் பங்கு என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குநர் ஆணையர் முகம்மது யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

அதேவேளையில் அதிகாரத்துவ எல்லைச்சாவடிகளின் பாதுகாப்பு மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின்கீழ் வருவதாக அவர் சொன்னார்.

“நிலத்திலும் கடற்புறத்திலும் உள்ள எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுடையது. கடத்தல் என்பது எல்லை தாண்டிய பிரச்சினை. இதற்கு அண்டை நாடுகளில் உள்ள சகாக்களின் அணுக்கமான ஒத்துழைப்பு தேவை,” என்று அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தார்.

தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்நாட்டுத் தரப்பினருடன் கலந்துகொண்டதாக ஆணையர் முகம்மது யூஸ்ரி கூறினார். அதில் ஆயுதப் படையினரும் காவல்துறையினரும் பங்கேற்றனர். அதில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டதாக ஆணையர் முகம்மது யூஸ்ரி குறிப்பிட்டார்.

நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துவதுபற்றிக் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த சுற்றுக்காவல் பணிகள், உளவுத்துறை தகவல் பரிமாற்றம், வழக்கமான பணிக்குழு கூட்டங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.

“எல்லைப் பாதுகாப்பு என்பது இனி மனிதவளத்தை மட்டும் சார்ந்தது அன்று. ஆளில்லா வானூர்திகளை ஈடுபடுத்துதல், உளவுத்துறைத் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், கண்காணிப்புத் திறன்களை விரிவுபடுத்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராய்தல் ஆகியவற்றின் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த அமலாக்கத்தை நோக்கி நாங்கள் நகர்கிறோம்,” என்று ஆணையர் முகம்மது யூஸ்ரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎல்லைபாதுகாப்புகண்காணிப்புஆளில்லா வானூர்திசெயற்கை நுண்ணறிவுஏஐ