வரும் செப்டம்பர் வரை ஏற்படவிருக்கும் தென்மேற்கு பருவநிலையின்போது மலேசியாவில் வறண்ட வானிலை அண்மைய ஆண்டுகளில் இருந்ததைவிட மோசமானதாக இருக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த மையம், தொடர்ச்சியாக குறைந்தது மூன்று நாள்களாக அங்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்று குறிப்பிட்டது.
முதல் நிலை எச்சரிக்கையாக வகைப்படுத்தப்படும் அத்தகைய நிலை, நேற்று முன்தின நிலவரப்படி ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்டது.
'எல் நினோ' வானிலை நிகழ்வுக்கு மத்தியில், ஆசியாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. வியட்னாமிலும் லாவோசிலும் இந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பநிலை உயர்ந்தது.
சிங்கப்பூரிலும் 40 ஆண்டுகளில் காணப்படாத அளவு கடந்த சனிக்கிழமை வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை எட்டியது.
எனினும், மலேசியாவின் சில பகுதிகளில் வீசிவரும் வலுவான காற்றும் பெய்துவரும் கனமழையும் வெப்பம் மோசமடைவதை அனேகமாக தடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
பல ஆசிய நாடுகளில் கொளுத்திவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மலேசியா பாதுகாக்கப்பட்டுள்ளது.
மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கரையோரப் பகுதிகளிலும் சாபா மாநிலத்தின் மேற்கிலும் கனமழையும் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வேகத்தில் வீசும் காற்றும் அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், வறண்ட வானிலை காட்டுத்தீக்கும் புகைமூட்டத்துக்கும் இட்டுச்செல்லக்கூடும் என்பதால் நிலவரம் மோசமடைவதற்கு தான் தயாராக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.
மலேசியாவில் 1998 ஏப்ரல் 9ஆம் தேதி ஆக அதிக வெப்பநிலையாக 40.1 டிகிரி செல்சியஸ் பதிவானது. அப்போது 'எல் நினோ' வானிலை நிகழ்வு ஏற்பட்டது.

