பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில், போலி வாடகை வீடுகள் தொடர்பான மோசடி எண்ணிக்கை மூவாண்டுகளில் 400 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இல்லாத வீட்டுக்கு முன்பணம் செலுத்தியோர் பணத்தை இழந்தது மட்டுமின்றி அத்தகையோரின் தனிப்பட்ட விவரங்களும் திருடப்பட்டு பலமுறை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு போலி வாடகை வீடு மோசடிகளின் எண்ணிக்கை 184ஆக இருந்தது. கடந்த ஆண்டு அது 900க்கும் அதிகமாக உயர்ந்தது.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் சொத்துச் சந்தை முகவர்களைப் போலவும் வீட்டு உரிமையாளர்களைப் போலவும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இல்லாத ஒரு வீட்டை மிகவும் மலிவான வாடகைக்கு விடுவதாக விளம்பரப்படுத்துகின்றனர்.
“அதுபோன்ற மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்புகொண்டு வீட்டுக்கான தேவை அதிகமாக இருப்பதால் விரைவாக முன்பணம் செலுத்தும்படி அழுத்தம் தருகின்றனர்,” என்றார் மத்தியக் காவல்துறை வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ருஸ்டி முகமது இசா.
பல்வேறு காரணங்களைச் சொல்லி பணம் செலுத்துவோரை மோசடிக்காரர்கள் நேரடியாகச் சந்திப்பதில்லை. வாடகை வீட்டையும் அவர்கள் நேரடியாகப் பார்க்கவிடுவதில்லை.
பல்வேறு சமூக ஊடகத் தளங்களை மோசடிக்காரர்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகத் திரு ருஸ்டி குறிப்பிட்டார்.
மோசடிக்காரர்கள் விரைவாகத் தங்கள் தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை மாற்றி கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதையும் அதிகாரிகள அறிந்திருப்பதைத் திரு ருஸ்டி பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
போலி வாடகை வீடு மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் கடந்த ஆண்டு இழந்த தொகை கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ரிங்கிட் என்ற திரு ருஸ்டி, 2023இல் 396,246.55 ரிங்கிட்டாக இருந்த அது 2024ஆம் ஆண்டு 835,367.71ஆக அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.
போலி வாடகை வீடு மோசடித் தொடர்பில் 2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் வாடகை வீடுகளுக்கு முன்பணம் செலுத்தும்முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

