ஜூலை 20ல் மலேசிய மாமன்னரின் சடங்குபூர்வ முடிசூட்டு விழா

2 mins read
154550f7-58d3-411f-afa9-21bb119c3d2c
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் (நடுவில்). - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் முடிசூடும் சடங்குபூர்வ விழா ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மலேசிய மன்னராட்சி முறை வரலாற்றில் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நிகழ்ச்சிக்காக மும்முரமாக மேற்கொள்ளப்படும் ஏற்பாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையவிருப்பதாகக் கூறப்பட்டது.

ஆறு மாதங்களாக ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஏறக்குறைய 93 விழுக்காட்டுப் பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுல்தான் இப்ராகிம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி மலேசியாவின் 17வது மாமன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாட்டுப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

மலேசியாவின் மன்னராட்சி முறை குறித்து உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த விழா அமைந்திருக்கும் என்று கூறப்பட்டது.

சுழற்சி முறையில் மாமன்னர் நியமிக்கப்படும் ஒரே நாடு மலேசியா. தனித்துவமிக்க இந்த நடைமுறையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக மாமன்னரின் முடிசூட்டு விழா நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.

விழா சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய, ஏற்பாட்டு பணிகளில் கிட்டத்தட்ட 2,000 பேர் ஈடுபட்டுள்ளனர். மாமன்னரின் அரண்மனை ஊழியர்களுடன் அரச மலேசியக் காவல்படை, மலேசிய ஆயுதப் படை, பொதுப் பணித் துறை போன்ற பல்வேறு அமைப்புகளின் ஊழியர்களும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசிய மாமன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவராக தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய மாநிலங்களில் ஆட்சி புரியும் சுல்தான்களுடன் புருணை சுல்தான், பஹ்ரைன் மன்னர், வெளிநாட்டுத் தூதர்கள், பேராளர்கள் உட்பட 700 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

ஜூலை 18ஆம் தேதியே முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும். மாமன்னர் அரியணை ஏறிய பிறகு மிகப் பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி அரசகுலத் தேநீர் விருந்துடன் முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்