மலேசியாவில் 16 டன்னுக்கும் மேலான ‘சார்டின்’ மீன்களில் புழுக்கள் கண்டுபிடிப்பு

மலேசியாவில் 16 டன்னுக்கும் மேலான ‘சார்டின்’ மீன்களில் புழுக்கள் கண்டுபிடிப்பு

1 mins read
5cf805a3-ba10-4702-a3e6-e3122f45616a
படத்தில் தெரியும் ‘அனிசகிஸ்’ புழுக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். - படம்: ஜோகூர் மலேசிய தனிமைப்படுத்துதல், சோதனைச் சேவை

சிங்கப்பூர் வழியாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 டன்னுக்கும் மேலான சார்டின் மீன்களில் புழுக்கள் இருந்ததை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மாதிரிகளில், ‘அனிசகிஸ்’ புழுக்கள் இருந்ததாக மலேசிய தனிமைப்படுத்துதல், சோதனைச் சேவை தெரிவித்தது. அந்தப் புழுவை உட்கொண்டால், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளுடன் நோய்த்தொற்று ஏற்படலாம் என்று அது கூறியது.

மார்ச் 27ஆம் தேதியன்று, 83,879 ரிங்கிட் (S$24,000) பெறுமானமுள்ள மீன்கள் சீனாவிலிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தன. அதன் பிறகு இறக்குமதிக்கான அனுமதி இல்லாமல் லாரி வாயிலாக அவை மலேசியாவுக்குள் கொண்டுசெல்லப்பட்டதாக ‘மலாய் மெயில்’ தெரிவித்தது.

அந்த சார்டின் உணவுப்பொருள்கள், ஜோகூர் பாருவின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடியில் உள்ள சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் கைப்பற்றப்பட்டன.

முப்பது வயது லாரி ஓட்டுநரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.

அந்த சார்டின் மீன்கள் சிங்கப்பூரில் விற்கப்பட்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் உணவு அமைப்பையும், மலேசிய தனிமைப்படுத்துதல், சோதனைச் சேவையையும் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்