வேலைவாய்ப்புகளில் மலேசியா அதிக கவனம் செலுத்தும்: அன்வார்

2 mins read
5f66c5f9-cff8-4c34-88f0-955291e4455a
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், வேலைகளின் உருவாக்கத்திலும் சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்துவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் கூறினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் நிலவரம் குறித்த அனைத்துலகப் பண நிதியத்தின் மதிப்பீட்டை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வரவேற்றுள்ளார்.

பொருளியல் நிலைத்தன்மை பொறுப்பான முறையில் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் சொன்னார்.

அதனைப் பொதுமக்களும் உணரமுடியும் என்றார் திரு அன்வார். மக்களுக்குப் பாதுகாப்பான, நியாயமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதும் உறுதிசெய்யப்படும் என்று அவர் சொன்னார். அது மட்டுமின்றி, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.

 “அரசாங்கம், பொதுமக்களின் நிதியைத் தொடர்ந்து விவேகத்துடன் நிர்வகித்து, சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்தும். அவ்வாறு செய்வதன் மூலம் வளர்ச்சி உண்மையிலேயே வலுவானதாகவும் மீள்திறன் உடையதாகவும் இருக்கும். மலேசியர்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள வகையில் அவற்றால் அனுகூலங்கள் கிடைக்கும்,” என்று அவர் சொன்னார்.

சமூக ஊடகத்தில் திரு அன்வார் அந்தக் கருத்துகளைப் பதிவிட்டார்.

உலக வர்த்தகப் பதற்றத்திற்கு இடையே மலேசியா குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மீள்திறனை வெளிப்படுத்தியிருப்பதாகப் பண நிதியத்தின் சார்பில் மலேசியப் பொருளியலை மேற்பார்வையிடும் வல்லுநர் மசாஹிரோ நொசாக்கி சொன்னார். கொள்கைகள் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதும் பொருளியல் இவ்வாண்டு ஆரோக்கியமான வேகத்தில் வளர்ச்சி கண்டிருப்பதை அவர் சுட்டினார்.

உள்நாட்டில் செய்யப்படும் முதலீடும் வாங்கப்படுகின்ற பொருள்களின் அளவும் வலுவாக இருக்கின்றன. அவற்றோடு வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் நிலையாக உள்ளது. தொழில்நுட்பத் துறையும் உலக அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மலேசியப் பொருளியலின் நல்ல வளர்ச்சிக்கு அவையெல்லாம் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

அதிகாரிகள் கவனத்துடனும் விவேகத்துடனும் நிதிக் கொள்கைகளைக் கட்டிக்காப்பதாகத் திரு நொசாக்கி கூறினார். மலேசியப் பொருளியலின் வளர்ச்சியில் அது பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொருளியல் மீள்திறன் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2025) 4.6 விழுக்காடாக இருந்த மலேசியப் பொருளியல் வளர்ச்சி, அடுத்த ஆண்டில் சற்றுத் தணிந்து 4.3 விழுக்காடாக இருக்கும் என்று பண நிதியம் முன்னுரைத்துள்ளது. மலேசியாமீது அமெரிக்கா விதித்த கூடுதல் தீர்வைகளே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்