சுபாங்: மலேசியா அடுத்த ஆண்டு ஆசியானுக்குத் தலைமைதாங்கவிருக்கும் நிலையில், ஆசியான் மின்சாரக் கட்டமைப்பிலும் மின்னிலக்கமயமாதலிலும் கவனம் செலுத்த அது நோக்கம் கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அது, ஆசியான் இடையேயான வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதி என்றார் அவர்.
அந்த விவகாரத்தின் தொடர்பில் சில நாடுகளின் முக்கியத் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“வியட்நாம், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருணை ஆகியவற்றின் தலைவர்களுடன் நான் கலந்து பேசியுள்ளேன். ஆசியான் மின்சாரக் கட்டமைப்பே நமது முக்கிய முன்னுரிமை என்பதை நான் கூறியிருக்கிறேன்,” என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திரு அன்வார் தெரிவித்தார்.
லாவோஸ், தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து வரும் மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு முதன்முதலில் சிரமங்களை எதிர்நோக்கியதாக மலேசிய நிதி அமைச்சருமான திரு அன்வார் கூறினார்.
இருப்பினும், அதனைப் பயன்படுத்தாவிட்டால் செலவுகள் கூடும் என்றார் அவர்.
இவ்வாண்டு ஆகஸ்ட்டில், லாவோஸ் - தாய்லாந்து - சிங்கப்பூர் மின்சார ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கான பேச்சுகள் முட்டுக்கட்டையைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசியான் இடையேயான வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆசியானை உத்திபூர்வ, போட்டித்தன்மைமிக்க மின்னிலக்க நடுவமாக நிலைநாட்டும் மின்னிலக்க முயற்சிகளை மேம்படுத்த மலேசியா தெரிவித்திருக்கும் கடப்பாட்டை திரு அன்வார் கோடிகாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
‘அனைவரையும் உள்ளடக்குதல், நீடித்த நிலைத்தன்மை’ என்ற கருப்பொருளின்கீழ், 2025ஆம் ஆண்டு முழுதும் ஆசியான் தொடர்பான 300 கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் ஆகியவற்றை மலேசியாே ஏற்று நடத்தவிருக்கிறது.