கோலாலம்பூர்: மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய பொருளியல் சவால்களை மலேசியா எதிர்கொள்ளும் வகையில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கச் சுழற்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
நிதி, உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டு, நாட்டின் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்த இந்த அணுகுமுறை முக்கியம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு தேசிய அறிவியல் மன்றத்தின் முதல் கூட்டத்திற்குத் தலைமையேற்றபோது இவ்விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, திங்கட்கிழமையன்று (மே 11) தமது ஃபேஸ்புக்கில் திரு அன்வார் பதிவிட்டிருந்தார்.
பல்வேறு பணி சார்ந்த முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம் வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி, நிலையான பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், புதுமை, உயர் மதிப்புடைய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை மேற்கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளியல் தீர்வுகளுக்காக அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தை முதன்மை உந்து சக்திகளாக மாற்றும் உறுதியுடன், ஒவ்வொரு திட்டமிடலும் செயலாக்கமும் மேலும் இணக்கத்துடன், உத்திபூர்வமாகவும் திறம்படவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் திரு அன்வார் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

