மலேசியா: அநாகரிகமான ஆடை அணிந்த வெளிநாட்டினருக்கு அபராதம்

2 mins read
62cbf224-d387-4fc8-a54e-8d14fc6daa6e
சர்ச்சைக்குரிய ஓட்ட நிகழ்ச்சியின்போது அநாகரிகமான ஆடை அணிந்திருந்ததை வெளிநாட்டு ஆடவர் இருவரும் ஒப்புக்கொண்டனர். - படம்: தி ஸ்டார் இணையத்தளம்

கோத்தா திங்கி: மலேசியாவின் பெங்கிராங்கில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஓட்ட நிகழ்ச்சியின்போது அநாகரிகமாக ஆடை அணிந்திருந்த வெளிநாட்டு ஆடவர் இருவர்க்குத் தலா 5,000 ரிங்கிட் (1,546 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் அவ்வாறு ஆடை அணிந்திருந்ததை ஒப்புகொண்டனர்.

சத்யநாராயணன் பிரசாத் பப்போலி, 70, ஆர்தர் வாங், 66, இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி நூர்கலிடா ஃபர்ஹானா அபு பக்கர் முன்னிலையில் திங்கட்கிழமை (அக்டோபர் 7) வாசிக்கப்பட்டன.

தைவானைச் சேர்ந்த வாங்கிற்கு மாண்டரின் மொழியிலும் இந்தியாவைச் சேர்ந்த சத்யநாராயணனுக்கு ஆங்கிலத்திலும் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

ஆடவர்கள் இருவரும் பொது இடத்தில் அநாகரிகமான ஆடை அணிந்து மற்றவர்களுக்குத் தொந்தரவு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஜாலான் உத்தமா ஜாலான் டெசாருவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) மாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டனர்.

மலேசியாவின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 294ஆம் பிரிவின்கீழ், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொள்வது குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

முன்னதாக, ஆடவர் இருவருக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு கோரியது. வருகையாளர்கள், உள்ளூர் மக்கள் என இரு தரப்பினருக்குமே மலேசியாவின் நடைமுறையைப் பின்பற்றி நடக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பாடமாக அது அமையும் என்று அது வலியுறுத்தியது.

தைவானில் கடந்த 10 ஆண்டுகளாகப் பழங்குடி மக்களின் கலாசாரத்தை எடுத்துக்கூறிவருவதாகச் சொன்ன வாங், மலேசிய நடைமுறை தனக்குத் தெரியாது என்று கூறியதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

நன்கொடை நிகழ்ச்சியில் பங்களிக்கும் நோக்குடன் மலேசியா வந்ததாகவும் பெண்கள் அணியும் ஆடையை அணிந்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் சத்யநாராயணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்