மலேசியா: உரத் தட்டுப்பாட்டால் பழங்களின் விலை உயரக்கூடும்

மலேசியா: உரத் தட்டுப்பாட்டால் பழங்களின் விலை உயரக்கூடும்

1 of 2
மாதிரிப்படம்: பிக்சாபே
மாதிரிப்படம்: பிக்சாபே

23 Mar 2026 - 3:38 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தொடுத்துவரும் தாக்குதல்கள் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனால், அடுத்த மூன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் மலேசியாவில் பழங்களின் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்குப் போரால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், உழவர்கள் அதிக விலை கொடுத்து வேதி உரங்களை வாங்க வேண்டியுள்ளது என்று மலேசியப் பழ விளைவிப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் கோ லாய் ஆன் தெரிவித்தார்.

இதன் விளைவாக, உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என்பதால் பயனீட்டாளர்கள் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

மத்திய கிழக்குச் சண்டை ஏற்படுத்தியுள்ள தொடர்விளைவுகளால் மலேசியாவில் பழங்களின் விலை 20 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் உயரக்கூடும் என்று திரு கோ கூறியுள்ளார்.

உரங்களுக்கான முக்கிய உற்பத்தி மையமாகவும் உர மூலப்பொருள்களுக்கான போக்குவரத்து இடைவழி முனையாகவும் மத்திய கிழக்கு திகழ்கிறது என்று சின் சியூ நாளிதழிடம் திரு கோ குறிப்பிட்டார்.

அங்குச் சண்டை நீடிப்பதால் மார்ச் நடுப்பகுதியிலிருந்து உரங்களுக்கான புதிய கோரிக்கைகளை மலேசிய உர விநியோகிப்பாளர்கள் தற்காலிகமாக மறுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

“இரண்டே வாரங்களில் உர மூலப்பொருள்களின் விலை ஒன்றரை மடங்குவரை கூடிவிட்டது.

“பணம் வைத்திருந்தாலும் உரத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

போர் நீடித்தால் உரமே கிடைக்காத நிலையை மலேசிய உழவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் திரு கோ எச்சரித்துள்ளார்.

சரியான நேரத்தில் உரமிடாவிடில் பழங்களின் வளர்ச்சியும் விளைச்சலும் குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “அடுத்த பருவத்தில் 10 முதல் 15 விழுக்காடுவரை வளர்ச்சி குறையலாம். அத்துடன், பழ மரங்களின் நீண்டகால உற்பத்தித்திறனையும் அது பாதிக்கக்கூடும்,” என்றும் திரு கோ சொன்னார்.

பழங்களை விளைவிக்க உரங்களுக்கு 30 முதல் 50 விழுக்காடு வரை செலவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு கூடி, அதன் விளைவாக ஒட்டுமொத்த உற்பத்திச் செலவும் குறைந்தது 30 விழுக்காடு அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

உழவர்கள் வேதி உரங்களைக் குறைத்துக்கொண்டு இயற்கை உரங்களை நாடினாலும் அது தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் திரு கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபழம்விலைஉரம்