பெய்ஜிங்: மலேசியாவில் சிறுமி ஒருவர் தமது தாயார் உறவினர்களிடம் காட்டும் தாராள மனப்பான்மையைக் கண்டு, தம்முடன் பயிலும் சக மாணவர்களிடம் 3,000 ரிங்கிட் (US$700) வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமது மகளின் ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து, அந்தத் தாயார் சமூக ஊடகத்தில் அது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
அந்தச் சிறுமி தமது நண்பர்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்ததாக ஆசிரியர் கூறியதாக ‘சைனா பிரஸ்’ தெரிவித்தது.
மகள் 20, 50, 100 ரிங்கிட் நோட்டுகளில் கிட்டத்தட்ட 3,000 ரிங்கிட் வழங்கியிருப்பது குறித்து தாயார் அதிர்ச்சி தெரிவித்தார்.
அன்றாடம் மகளுக்கு 5 ரிங்கிட் மட்டுமே கொடுத்ததாகக் கூறிய தாயார், அவளுக்கு அவ்வளவு பணம் இருந்தது பற்றி யோசித்தார்.
அந்தச் சிறுமி நோன்புப் பெருநாளின்போது உறவினர்கள் தனக்குக் கொடுத்த பணத்தைப் பயன்படுத்தியதாகப் பின்னர் தெரியவந்தது.
தமது தாயார் எவ்வாறு அவரது உறவினர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறாரோ, அது போல தாமும் தமது நண்பர்களை மகிழ்விக்க விரும்பியதாக அந்தச் சிறுமி விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
மகளின் செயலைக் கண்டு நெகிழ்ந்துபோன தாயார், அதேநேரம் வழங்கப்பட்ட மொத்தத் தொகையின் மதிப்பை அறிந்து கண்ணீரும் விட்டார். அது பெரும் தொகை என்று கூறினார் தாயார்.
“பிள்ளைகளின் கள்ளங்கபடமற்ற செயல்கள் பெரியவர்களைச் சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும்,” என்று இணையவாசி ஒருவர் கூறினார்.