ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரர்களைப் பணியமர்த்தவில்லை: மலேசியப் பிரதமர் அன்வார்

ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரர்களைப் பணியமர்த்தவில்லை: மலேசியப் பிரதமர் அன்வார்

2 mins read
504f52c8-1130-481c-8a4e-90b3b93b60da
சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவருவதன் மூலம், உள்ளூர் ஆசிரியர்களை அவமதிப்பதாக சில தரப்பினர் தம்மைக் குறைகூறியதாகத் திரு அன்வார் கூறினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புத்ரஜெயா: ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்களைப் பணி அமர்த்துவது குறித்து மலேசியா யோசித்துவருவதாகக் கூறப்படும் கருத்துகளை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.

தொண்டூழியத் திட்டமாக அமையவிருக்கும் அந்தப் பரிந்துரை, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதையும், ஆங்கிலப் புலமையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.

“முதலில் கேளுங்கள். சில நேரங்களில் ‘மூன்று நிமிட நிபுணர்கள்’ சமூக ஊடகத்தில் எளிதில் கருத்துகளைத் தெரிவித்துவிடுவர். அவர்களின் கருத்துகள் அனைத்தும் தவறானவை,” என்று திரு அன்வார் கூறினார்.

“நாங்கள் சிங்கப்பூரிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துகிறோம் என்பது ஊகம். அது தவறானது,” என்று ஜூன் 14ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.

“அண்மையில் நான் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து, சில விவகாரங்கள் குறித்து கலந்துபேசினேன்,” என்று திரு அன்வார் சொன்னார்.

சிங்கப்பூரிலிருந்து உதவித் திட்டத்தை அமைப்பது, சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழுச் செலவில் தொண்டூழியர்களைப் பெற்று, அவர்களைக் கிராமப்புறப் பகுதிகள், சாபா, சரவாக் பகுதிகள் ஆகியவற்றுக்கு அனுப்பி ஆங்கிலம் கற்பிக்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான சாத்தியங்கள் அந்த விவகாரங்களில் அடங்கும் என்றார் அவர்.

ஜூன் 12ஆம் தேதி, திரு அன்வாரும் திரு லாரன்ஸ் வோங்கும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்வதற்காகச் சந்தித்தனர்.

சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவருவதன் மூலம், உள்ளூர் ஆசிரியர்களை அவமதிப்பதாக சில தரப்பினர் தம்மைக் குறைகூறியதாகத் திரு அன்வார் கூறினார்.

“நமது நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது மட்டுமே நோக்கம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்