மலேசியாவில் சொகுசு வரி கைவிடப்பட்டது

2 mins read
d7580a2e-4f14-403f-b8a2-499b68f44649
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ள குறைந்த விலை பொருள்களுக்கான வரி, 2025ஆம் ஆண்டில் 500 மில்லியன் ரிங்கிட் (S$151.8 மில்லியன்) வருமானத்தை ஈட்டித் தந்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஆடம்பரப் பொருள்கள் மீது சொகுசு வரி விதிக்க மலேசிய அரசாங்கம் திட்டமிருந்தது. ஆனால் அத்திட்டத்தைக் கைவிட முடிவெடுத்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மாறாக, திருத்தப்பட்ட விற்பனை வரிக் கட்டமைப்பில் அது சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆடம்பரப் பொருள்கள் அல்லது பயனீட்டாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்தும் பொருள்கள் மீது ஐந்து அல்லது பத்து விழுக்காடு வரி விதிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ள குறைந்த விலை பொருள்களுக்கான வரி, 2025ஆம் ஆண்டில் 500 மில்லியன் ரிங்கிட் (S$151.8 மில்லியன்) வருமானத்தை ஈட்டித் தந்துள்ளதாகத் திரு அன்வார் தெரிவித்தார்.

விற்பனை வரி விகிதம் மற்றும் சேவை வரியின் விரிவாக்கம் ஆகியவை குறித்து அரசாங்கத்தின் ஆக அண்மைய மறுஆய்வு ஜூலை 1ல் நடப்புக்கு வந்ததாக அவர் கூறினார்.

இதன்மூலம் மலேசியாவின் தேசிய வருவாய் 2025ல் ஐந்து பில்லியன் ரிங்கிட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு அன்வார் தெரிவித்தார். இந்த வருவாய் 2026ல் இரண்டு மடங்கு அதிகரித்து 10 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நடப்பில் உள்ள டீசல் எரிபொருள் மானியப் பங்கீட்டு முறை மூலம் மலேசிய அரசாங்கம் மாதத்துக்கு 600 மில்லியன் ரிங்கிட் மிச்சப்படுத்துவதாக திரு அன்வார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வப் பதிலளித்தார்.

தேசிய வருவாயை வலுப்படுத்துவதில் மற்ற நிதி சீர்திருத்த நடவடிக்கைகளும் பேரளவில் பங்களித்துள்ளதை அவர் சுட்டினார்.

மின்னிலக்கப் பொருள்களுக்கான வரி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றபோதிலும் அத்தகைய பொருள்கள் மீது சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் திரு அன்வார் தெரிவித்தார். இந்த அணுகுமுறை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்பில் உள்ளதாக அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்