ஜோகூர் பாரு: ‘விஇபி’ எனப்படும் வாகன நுழைவு அனுமதி வில்லைக்கு விண்ணப்பிக்க தவறிய சிங்கப்பூரில் பதிவான கார்களின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 50 எச்சரிக்கைக் கடிதங்களை மலேசியா வழங்கியுள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அதனைத் தெரிவித்தார்.
‘விஇபி’ வாகன நுழைவு அனுமதித் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
இதுவரை 112,658 ‘விஇபி’ வில்லைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 75,000க்கும் மேற்பட்டவை பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் திரு லோக் கூறினார்.
இதுவரை இரண்டு சுங்கத்துறைகளிலும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் செல்லும் 678 கார்களை சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததாக அவர் சொன்னார்.
‘விஇபி’க்கு இன்னமும் விண்ணப்பிக்காத வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு விண்ணப்பித்து, ஆனால் அதனை இன்னும் பொருத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகளுக்குக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் எச்சரிக்கைகள் காட்டப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் எச்சரிக்கைக் கடிதங்களைப் பெறுவதைக் காட்டும் உறுதிசெய்யப்படாத புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வலம் வருகின்றன.
‘விஇபி’க்கு விண்ணப்பிக்காதவர்கள் அல்லது வில்லைகளை காரில் பொருத்தாதவர்களில் சிலர், அதிகாரிகள் தங்கள் வாகனங்களைச் சோதித்த பிறகு, தங்களை மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறினர். இந்தக் கருத்துகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சால் உறுதிசெய்ய முடியவில்லை.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து நிலம்வழி மலேசியாவுக்குள் செல்லும் வெளிநாட்டில் பதிவான அனைத்து வாகனங்களும் ‘விஇபி’ஐ கொண்டிருக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இன்னும் ‘விஇபி’ வில்லையைப் பொருத்தாதவர்கள் தொடர்ந்து மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அமலாக்க நடைமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் செப்டம்பர் 27ஆம் தேதி மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை கூறியது.
இந்நிலையில், ‘விஇபி’ வில்லைகளைப் பொருத்த, ஜோகூர் பாரு கடைத்தொகுதிகள் உட்பட மேலும் அதிகமான ‘விஇபி’ நிலையங்களைத் திறக்க மலேசியா எண்ணம் கொண்டுள்ளதாகத் திரு லோக் கூறியுள்ளார்.
ஜோகூர் பாருவில் உள்ள மூன்று ‘விஇபி’ நிலையங்களிலும், உட்லண்ட்சில் உள்ள ஒரு நிலையத்திலும் அளவுக்கு அதிகமான கோரிக்கைகள் குவிந்துள்ளன.
எந்தெந்த கடைத்தொகுதிகளில் இந்தச் சேவையைப் பெறலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவற்றைப் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திரு லோக் பதில் அளித்தார்.

