பெட்டாலிங் ஜெயா: 10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் அனைத்துலகக் கடப்பிதழ்கள் வழங்குவதை மலேசியக் குடிநுழைவுத் துறை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
வெளிநாட்டு விமான நிறுவனங்களில் பயணிகள், பயணத்தை உறுதிசெய்யும்போது சிக்கல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கடப்பிதழ் உரிமையாளர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மாற்றுக் கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படும்.
மலேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமைச் செயலாளர் ஸக்காரியா ஷாபன் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அதனைத் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் கடப்பிதழ்களுக்கு அனைத்துலக அளவில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக ஆறு மாதக் கடப்பிதழ் செல்லுபடியாகும் காலம் தொடர்பான தேவையைச் சில விமான நிறுவனங்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டதால் குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தவிர்க்கவே, அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தை 10 ஆண்டுகளாக முறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகத் திரு ஸக்காரியா கூறினார்.
மாற்றுக் கடப்பிதழ்கள் வழங்கும் பணியில், பாதிக்கப்பட்ட கடப்பிதழ் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
வெளிநாடுகளில் இதனால் பாதிக்கப்பட்ட மலேசியப் பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத் துறை சார்பில் இதுபற்றிய கடிதம் அனுப்பப்படும் என்றும் திரு ஸக்காரியா குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் வரை இந்த இடைநிறுத்தம் நடப்பில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


