தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரங்கம்மை: உயர் விழிப்புநிலையில் மலேசியா

2 mins read
e2c040cc-e5de-4f76-b640-8c5222aa7dcc
மலேசியக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு, சோதனையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள், அந்நாட்டைச் சென்றடைந்ததும் தங்கள் உடல் நிலையை 21 நாள்களுக்குக் கண்காணிக்க வேண்டும். - படம்: பெரித்தா ஹரியான்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இவ்வாண்டு இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை என்றபோதிலும் அதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கண்காணிப்பு, விழிப்புணர்வுப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

குரங்கம்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் உயர் விழிப்புநிலையை அறிவித்துள்ளது.

இதையடுத்து, மலேசியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

மலேசியக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு, சோதனையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள், அந்நாட்டைச் சென்றடைந்ததும் தங்கள் உடல்நிலையை 21 நாள்களுக்குக் கண்காணிக்க வேண்டும்.

குரங்கம்மை அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள் அல்லது உடலில் சொறி, கொப்புளம் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருந்தகம் அல்லது மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், கிருமிப் பரவலைத் தடுக்க அவர்கள் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மலேசிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

நோயாளிகளுக்குக் குரங்கம்மை ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களுக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டாலோ அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகள் அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவச் சோதனைகளை நடத்த போதுமான ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதி அளித்தது.

பாலியல் உறவு மூலம் குரங்கம்மை பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அது அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், உலகளாவிய நிலையில், 99,176 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டனர்.

அதே காலகட்டத்தில் இந்நோய் காரணமாக 208 பேர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்
குரங்கம்மைகிருமித்தொற்றுமலேசியா